13

DeqttagamAமரபுக் கதை 8

 

தேவதை மர அதிசயம்

                                           

தற்போது பிறநாட்டவர்களும் வசதி படைத்தவர்களும் வாழும் இடமான கறுவாக் காடு எனப்படும் கொழும்பு மாநகரசபையின் ஏழாம வட்டாரம் ஒரு காலத்தில் கறுவா மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. பழமை வாய்ந்த பிஷப் கல்லூரி 190 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட பப்டிஸ்ட் தேவாலயம் போன்ற சரித்திர வரலாறு படைத்த கட்டிடங்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது. நல்ல நிழலைத் தரும் முதிர்ந்த மரச்சோலைகள் நிறைந்த இப்பகுதியை ஆங்கிலேயர் பெருதும்; விரும்பியபடியால் பல வீடுகள் தோன்றின. சிறிது சிறிதாக கறுவாக் காடுகள் அழிக்கப்பட்டு அதிகாரிகள் தங்க வீடுகளும், காரியாலயங்களும் அமைக்கப்பட்டன. அங்குள்ள காணிகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியது. பல அரச திணைக்களங்கள் உள்ள கொழும்புக் கோட்டைக்கு அங்கிருந்து போக இலகுவாக இருந்தபடியால் அப்பகுதி பிரசித்தம் அடைந்தது. இன்று கொழும்பு மாநகரசபை கட்டிடமும், பிரதான வைத்தியசாலையும் இப்பகுதியில் உண்டு.

கொழும்பு கறுவாக்காட்டு பகுதியில் உள்ள லிப்டன்ஸ வட்டத்தை (Liptons Circle) எவரும்; அறிந்ததே. அதனைக் கண் ஆஸ்பத்திரி சந்தி (Eye Hospital Junction) என்றும்அழைப்பர். ஆறு வீதிகள் சந்திக்கும் முக்கிய சந்தி அது. அச்சந்திக்கு அருகே கொழும்பு மாநகரசபைக்கு பின் பக்கத்தில் உள்ள “தேவத்தாககா மசூதி” சுமார் 183 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தேவத்தாககா என்பது தேவதை மரம் என்பதை சிங்களத்தில் குறிக்கும். தேவதை இருந்த அந்த மரம் அங்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவ்விடத்தில் ஒரு அதிசயம் நடந்ததினால் ஒரு மசூதி தோன்ற காரணமாகயிருந்தது என்பது மரபு வழி வந்த கதையாகும்.  சேக் உஸ்மான சித்தீக்கி பின் அப்துல் ரகுமான் என்ற ஒரு ஞானி சமாதி அடைந்த அவ்விடத்தில் அவர் ஞாபகாத்தமாக கட்டப்பட்ட மசூதியை அவ்வழியே போகும் ஒரு முஸ்லீமாவது தரிசிக்காமல் செல்வது கிடையாது. வெள்ளை சாயம் பூசிய அக்கட்டிடம் எவரது பார்வையில் இருந்தும் தப்பாது. இந்த ஞானி சிவனொலிபாத மலையையும் பலாங்கொடையில் உள்ள பள்ளிவாசல ஒன்றையும் தரிசிப்பதற்காக சௌதி அரேபியாவில் உள்ள அரபாத் என்ற இடத்தில் இருந்து வந்ததாகவும், நாடு திரும்பும் வழியில் கறுவாக்காட்டில் வசித்ததாகவும் பின்னர். ஆங்கேயே சமாதி அடைந்ததாகவும் கதையுண்டு.

1820ஆம் ஆண்டில் பம்பலபிட்டி என்ற வட்டாரத்தில் இருந்து மருதானை என்ற பகுதிக்கு போவதென்றால் அக்காலத்தில் கறுவாக்காட்டு வழியாகதான போக இலகுவாக இருந்தது. எண்ணை வணிகம் செய்யும் ஒருத்தி தனது மருதானையில் வசிக்கும் வாடிக்கை காரர்களுக்கு, மண் பானைகளில், பம்பலப்பிட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து இக் கறுவாக்காடு வழியே தினமும் எண்ணை எடுத்துச் செல்வது வழக்கம். அவளது முழுக்குடும்பமும் அவளது உழைப்பிலேயே தங்கி வாழ்ந்தது. நேர்மையான கடவுள் பக்தி நிறைந்த உழைப்பாளி அவள். ஒரு நாள் தலையில் எண்ணை பானையுடன் போகும் போது கஜு மரத்தின் வேர் ஒன்றில் கால் தடுக்கி விழுந்தால். தலையில் இருந்து எண்ணைப் பானை கீழே விழுந்து உடைந்தது. எண்ணை நிலத்தில் சிதறியது.

“ஐயோ கடவுளே எனக்கு இக்கதியா? என் குடும்பத்துக்கு இன்று உண்பதற்கு உணவில்லாமல் போகப்போகிறதே. நான் விற்பதற்கு கொண்டு வந்த எண்ணை எல்லாம் பானை உடைந்ததால் சிதறி விட்டதே! நான் இனி என்ன செய்வேன்?” என ஓ வென்று கதறி அழுதாள்.

அச்சமயம் அவளைச் சமாதானப் படுத்த அக்காட்டில் ஒருவரும் இருக்கவில்லை. தன் தலை விதியை நொந்து அழுதபடி அசதியினால் அம்மரத்தடியில் தூங்கிவிட்டாள். தீடிரென ஒரு அசிரீரி கேட்டு அவள் பதைத்து எழுந்தாள்.

“பெண்ணே கவலைப்படாதே. எல்லாம் நல்லபடி நடக்கும்.” என்றது அந்தக் குரல். பெண் சுற்றும் முற்றும் பார்த்தாள் குரலுக்கு சொந்தமானவரைக் காணவிலலை. மீண்டும் பயத்தால் அழத்தொடங்கினாள். திரும்பவும் அதே குரல் கேட்டது. அந்த குரல் கேட்ட திசையை நோக்கிய போது பச்சை நிற ஆடை அணிந்த தாடியுடன் ஒரு முதியவரை கண்டாள். அவர் அங்கு தோன்றியது அவளுக்கு ஆறுலைக் கொடுத்தது. அவள் அருகே வந்து அவர் “நீ ஒன்றுக்கும் பயப்படாதே. கீழே நீ சிந்திய எண்ணை முழுவதையும் உனக்கு திருப்பித் தருகிறேன். அதற்கு ஒரு பானை ஒன்றை கொண்டுவா” என்றார் முதியவர். உடனே அருகாமையில் உள்ள மருதானையில் அவளது வாடிக்கைக்காரர் மம்மா லெப்பை என்பவரின் வீடு தான் அவள் நினைவுக்கு வந்தது. உடனே அவர் வீட்டுக்குச்சென்று அவரின் தாயாரிடம் தனக்கு ஒரு பானை தரும்படி கேட்டாள். எண்ணைக்காரியின் புதுமையான வேண்டுகோள் மம்மா லெப்பையின் தாயுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. “என்ன உனக்கு நடந்தது”? என அவள் கேட்ட போது, “நான் திரும்பி வந்து எனக்கு நடந்த முழுக்கதைiயும் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று பதில் சொல்லிவிட்டு பானையுடன் தடுக்கி விழுந்த மரத்தடிக்குப் திரும்பவும் சென்றாள்.

அங்கே அந்த முதியவர் தேவதாமரத்தோடு சாயந்தபடி நினறார். அவளை பானை உடைந்து கிடந்து இடத்தில் கொண்டு வந்த பானையை வைக்கச்சொன்னார். அவளும் அவ்வாரே செய்தாள். உடனே தனது கால் பாதத்தை எண்ணை சிந்திய பகுதியில் அமிழ்தினார். என்ன ஆச்சரியம.; மண்ணுடன் கலந்து போன எண்ணை குபு குபு வென்று பூமியில் இருந்து வெளியேறியது. பெண் ஆச்சரியத்தால் வாயடைத்துப்போனாள். கஜு மரத்தில் இருந்து சில இலைகளைப் பறித்து அவளிடம் கொடுத்தார் அம் முதியவர். “இலைகளைப் பாவித்து எண்ணையை அள்ளி பானைக்குள் நிறப்பு” என்றார் அவர். அவளும் அவர் கட்டளையிட்டபடி செய்தாள். பானையில் எண்ணையை அவள் நிறப்பியதும், “இனி இதைக் கொண்டு போய் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து உனது குடும்பத்தின் பசியைத் தீர். நடந்ததை உனது முஸ்லீம் வாடிக்கைகாரர்களுக்கு எடுத்துச்சொல்லி இது நடந்த இடத்தை கொண்டு வந்து அவர்களுக்கு காட்டு என்றாh”. எண்ணை விற்கும் பெண்ணும் முதியவருக்கு நன்றி தெரிவத்து வணங்கி அவரது ஆசியைப் பெற்றாள்.

உடனே நடந்ததை மம்மா லெப்பையின் தாயுக்குப் போய் சொன்னாள். அவர்கள் அதை கேட்டபின் மம்மதா லெப்பை, பெரிய பிசசை, மீரா கானி ஆகிய மூவரும் எண்ணைக்காரியுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு உடைந்த பானை, எண்ணையில் தோய்ந்த மண், கஜு மரம், அதன் இலைகளைக் கண்டார்கள்; அற்புதத்தை செய்து காட்டிய யார் அந்த ஞானி என அல்லாவிடம் கேட்டு பிரார்தித்தனர். மம்தா லெப்பையின் விட்டுக்கு திரும்பவும் சென்ற அவர்களுக்கு லெப்பையின் தாய் எண்ணைக்காரி சொன்ன சம்பவம் உண்மையென உறுதிசெய்தாள். எண்ணைக்காரியிடம் இருந்த மிகுதி எண்ணையையும் வாங்கிக் கொண்டு அவளுக்கு உணவு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் மம்மா லெப்பை.

1847ஆம் ஆண்டு, இவ்வதிசயம் நடந்து 27 வருடங்களுக்கு பின்னர். இறைபக்தி உள்ள சேக் அலி ஜபரூத் மௌளானா என்பவர் அவ்விடத்தில் கட்டப்பட்டிருந்த மசூதிக்கு வந்தார். அவருக்கு நடந்த அதிசயம் எடுத்துச் சொல்லப்பட்டது. அவர் அந்த ஞானியின் சமாதியை அடையாளம் கண்டு அதன் தனது ஜுப்பா என்ற மத வழிபாட்டு ஆடையுடன் முழங்காளிட்டு வணங்கத் தொடங்கினார். சமாதியில் வணங்கி வெளிவந்த போது அவர் முகத்தில் ஒரு பிரகாசமான ஜோதி தெரிந்தது. அங்கு குழுமி இருந்த முஸ்லீம் பிரமுகர்களை நோக்கி” எல்லாம் வல்ல அல்லா! இது மதிப்புக்குரிய சேக் உஸ்மான சித்தீக்கி பின் அப்துல் ரகுமான் அவர்களின் சமாதி. இவர் இந்நாட்டுக்கு சௌதி அரேபியாவில் இருந்து வந்து சிவனொலிபாதமலையைத் தரிசித்த பின்னர் இவ்விடத்தில் சில காலம் வாழ்ந்து சமாதியானவர். இன்று முஸ்லீம் மாதமான சூல்குவதாவின் நாலாம் நாள். ஒவ்வொரு வருடமும் இம்மாதம் நாலாம் நாளிலிருந்து 10 நாட்கள் இந்த ஞானி நினைவாக பிரார்த்தனை செய்து நியாத் கொடுப்போமாக” என்றார். அவர் ஒரு தஙகப் பவுன் காசை அந்த மசூதிக்கு பொறுப்பாளரான மம்மா லெப்பையிடம் கையளித்து நெய்சோறு தயாரிக்கும் படி கட்டளையிட்டார்.  பின்னர் மூங்கில் கொடிக்கம்பத்தில் தனது வெள்ளைத் தலைப்பாகையில் இருந்த துணியின் ஒரு பகுதியை கிழித்து கொடியாக கட்டி, சமாதியின் தலைமாட்டில் கொடிக்கம்பத்தை நட்டு வணங்கினார். இந்த வழக்கம் இன்றும் இம்மசூதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book