12

Bathirakali2

மரபுக் கதை 7


முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன்

        

சிலாபத்திலிருந்து வடக்கே, குருநாகல் பாதையில், மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது முன்னேஸ்வரம் சிவன் கோவில். ஐந்து ஈஸ்வரங்களில் இதுவும் ஒன்ற. வரலாறு படைத்த கோயில். இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களில் முன்னேஸ்வரம் முதல் தோன்றியதால் முன்னேஸ்வரம் என்ற நாமம் பெற்றது என்பது பலர் கருத்து. சிவபக்தனான இராவணன் அதைத் தோற்றுவித்ததாக ஆதாரமற்ற கதைகளுண்டு

கத்தோலிக்கரும் பௌத்தர்களும் பெருபான்மையாக வாழும் சூழ்நிலையில் தொன்மைவாய்ந்த முன்னேஸ்வரத்தில் ஈஸ்வரன் எழுந்தருளியிருப்பது இந்து மதம் ஒருகாலத்தில் அப்பகுதிகளில் செழித்து வளர்ந்ததிற்குச் சான்றாகும். ஆலயத்தைச் சூழ தென்னந்தோட்டங்களும் நெல்வயல்களுமுண்டு.  குளக்கோட்டு மன்னன். பழம் பெருமைகளை இழந்து சிதைந்த நிலையில் இருந்த கோயிலைச் சீர்திருத்த திருப்பணிகளை குறைவறச் செய்து மகாகும்பாபிஷேகம் செய்வித்தான். ஆலயம் தொடர்பான கல்வெட்டுச் சாசனங்கள் இன்றும் காணப்படுகின்றன. ஆலயத்தில் உயரமான பழைய கற்குத்துவிளக்குகள் இன்றும் காணப்படுகின்றன. ஒரு சமயம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுமி அதிசயத்தக்தக்கவாறு தங்கவிக்கிரமாக மாறியதாகவும் அந்த விக்கிரகமே இன்றும் உள்ளே வைத்து பூஜை செய்யப்படுவதாகக் மரபு வழி வந்த கதையுண்டு.

ரிஷி முனிவரினால் இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டதால் முனிஈஸ்வரம் ஸ்ரீ முன்னேஸ்வரம் எனப்பெயர் வந்ததாகக் கதையுண்டு. யுத்தத்தில் இராவணனையும் ஆயிரக்கணக்கான வீரர்களையும் கொன்று இராமன் தன் மனைவி சீதை சகிதம் புஸ்பக விமானத்தில் இந்தியா திரும்பும்போது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்துக்கு விஜயம் செய்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார் எனத் தக்ஷண கைலாச மகாத்மீயம் கூறுகிறது. இக்கோயில் விஜயகுமாரனால் புணர்த்தனம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சோழர்கள் இலங்கையை ஆண்டபோது இக்கோயில் அவர்களால் பரிபாலிக்கப்பட்டது.

வியாசக முனிவரால் கூறப்பட்டக் கதையின்படி, சில ரிஷிகள் விஷ்ணுவை மோகினி என்ற பெண்வேடம் எடுத்து சிவனை மயக்கும்படி வேண்டினர். சிவன் அதையறிந்து பிட்சாதனன் என்ற வேடவ உருவம் எடுத்து மோகினியுடன் கலந்ததினால் ஐயனார் என்ற ஹரிஹரபுத்திரன் உதயமானார்.   ஐயனாருக்கு தெதுரு ஓயவுக்கு அருகேயுள்ள சித்தமடுவென்றயிடத்தில் கோயில் உண்டு. இப்போது அக்கோயிலுக்கு வேறுபெயருண்டு. ஈஸ்வரன் கோயிலைச் சுற்றிச்செல்லும் மாயவன் ஆற்றினை இப்போது தெதுரு ஓயாவென அழைப்பர்

1578ம் ஆண்டு போர்த்துக்கேயரின் பொருள் ஆசைக்கு இக்கோயில் பழியானது. கோயிலின் போக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கோயிலும் சிதைக்கப்பட்டது. இரு நூறு வருடங்களுக்குபின் ஒரு மீனவரின் வலையில் தேவியின் விக்கிரகம் சிக்கியது. அம்மீனவர் அவ்விக்கிரகத்தை ஒரு பிராமணரிடம் கொடுத்தான். அவரும் இரகசியமாக விக்கிரகத்திற்கு பூஜைசெய்து வந்தார். விக்கிரகம் பிராமணரிடம் இருப்பதை அறிந்து விக்கிரகத்தைக் களவெடுத்ததாக அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் மற்றைய விக்கரகங்களுடன் இருந்த உண்மையான விக்கிரகத்தை அடையாளம் காட்டாவிடில் சிறை செல்ல வேண்டுமேயென பிராமணர் பயந்தார். தன்னை காப்பாற்றும்படி தேவியிடம் வேண்டி வழிபட்டார். ஒரு நாள் இரவு தேவி கனவில் தோன்றி” உன் பக்தியை மெச்சினேன். நீ ஒன்றுக்கும் அஞ்சாதே.  ஒவ்வொரு விக்கிரகத்தையும் பார்த்தபின் நீ என்னருகே வந்தவுடன் உனக்கு ஒரு சமிக்ஞை காட்டுவேன். அப்போது நீ என்னை அடையாளம் காட்டலாம்.” என்றாள். அவ்வாரே நீதிமன்றத்தில் பல ஒரே மாதிரியான விக்கிரகங்களுக்கிடையே உண்மையான விக்கிரகத்தை அடையாளம் காட்டும் தினம் வந்தது. ஒவ்வொரு விக்கிரமாக பார்த்தபடி பிராமணர் பதட்டதுடன் தாண்டிவந்தார். உண்மையான தேவியின் விக்கிரகத்தை அணுகியபோது விக்கிரகத்திலிருந்த மலர் அவர் காலடியில் விழுந்தது. அதுவே தேவி கனவில் சொன்ன சமிக்ஞை எனக் கருதி விக்கிரகத்தை சரியாக அடையாளம் காட்டினார். வழக்கும் அவர் சார்பில் தீர்ந்தது. விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரதிஷ்டைசெய்து வணங்கத் தொடங்கினார்.

ஒரு பூரணைத்தினத்தன்று, ஆலமரத்தடியில் தியானம் செய்து கொண்டிருந்த அகஸ்தியர் முனிவர் முன் அம்மன் காட்சி அளித்து “நீ வேண்டிய வரம் கேள் “என்றாள். அகஸ்தியரோ தனக்கென வரம் கேட்காமல் அங்குள்ள பக்தர்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார் என ஐதீகக் கதையுண்டு. ஆகஸ்ட் மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று நடக்கும் திருவிழா. அகத்தியருக்கு அம்மன் காட்சியளித்த ஞாபகர்த்தமாக நடைபெறும். முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 27 நாட்கள் நடைபெறும், இதில் 20 நாட்கள் திருவிழாக்களை பௌத்த சிங்களவர்கள் நடத்தி தமக்கு சைவத்தில் உள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் வெளிப்படுத்துவார்கள்.

*******

முன்னேஸ்வரம் கோயிலுக்கு இரு காவல் தெய்வங்களுண்டு. வடமேற்கில் ஐயனார் என்ற ஐயப்பன் கோயிலும், வடக்கே பத்திரகாளி அம்மன் கோயிலுமுண்டு. பத்திரகாளி கோயிலில் ஒருகாலத்தில் ஆடு கோழி பலிகொடுக்கப்பட்டது. இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மரச்சோலையின் மத்தியில் அமைந்துள்ள. பத்திரகாளி கோயில் சிங்களவர்களாலும் தமிழர்களாலும் வழிபடும் கோயிலாகும்.  பத்திரகாளி அம்மனின் சக்தியைப் பற்றி பல கதைகள் உண்டு. குற்றச் செயல்கள் புரிந்து, வழக்குகளை சந்தித்த பலர் காளிக்கு நேர்ந்து உபவாசம் இருந்து பொங்கி பலி கொடுத்துச் சென்று வழக்கில் வெற்றி கண்டனர். இன்னொருவர் தனது எதிரியை பழி தீர்க்குமுகமாக காளிக்கு நேர்ந்து பொங்கி ஆட்டை பலிகொடுத்தாகவும், உடனே அவரின் எதிரி உயிர் போனதாக கதையுண்டு. முன்னேஸ்வரருக்கு மட்டும் காளி காவல் தெய்வமல்ல, அவள் ஊர்வாசிகளுக்கு கூட காவல் தெய்வமாக அமைந்திருந்தாள். சுற்று புறக் கிராமங்களில் தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும்; குற்றச் செயல்கள் பரவாமல் இருக்கவும் அவள் தான் காரணம் என்பது ஊர்வாசிகள்; நம்பிக்கை. மூலஸ்தானத்தில் கம்பீரமாக, தீய சக்திகளை வதை செய்யும் கோலத்தில் அவள் காட்சி கொடுத்தது பலருக்கு அவள் மேல் பயம் காரணமாக மரியாதையையும் தோற்றிவிக்க ஏதுவாக இருந்தது. சுற்றுப்புரக் கிராமங்களில் மக்கள் தினமும் அங்கு வந்து அவளைத் தரிசித்து செல்வார்கள்.

கோயிலைப் பராமரித்து, முன்று நேரமும் பூஜை செய்து வந்த லட்சுமணன் பூசாரியின் குடும்பம் கோயில் அருகே வாழ்ந்து வந்தது. கோயில் வளவு துப்பரவாக இருப்பதற்கு அவரே முழுக்காரணம். பூஜைக்கு பின் சில சமயம் உரு வந்து அவர் சொல்லும் வாக்கு பலித்தாக பலர் பேசிக் கொண்டார்கள். பூசாரிக்கு திருமணமாகி பத்து வருடங்களாகியும் குழந்தைச் செல்வம் கிடைக்கவில்லை. அதனால் மனமுடைந்த அவர் மனைவி சிறிது சிறிதாகக் காளி மேல் நம்பிக்கை இழக்கத் தொடங்கினாள். காளியின் பூஜைக்கு தினமும் அவள் செய்து கொடுத்த நெய்வேத்தியத்தை தயாரித்துக் கொடுப்பதில் பின்வாங்கத் தொடங்கினாள். கணவனுடன் சேர்ந்து கோயில் வளவை கூட்டி தினமும் துப்பரவு செய்யும் பணியும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. பூசாரி மனைவியின் போக்கினைக் கண்டு மனம் வருந்தினார். எவ்வளவோ காளியின் சக்தியைப் பற்றி சொல்லிப் பார்த்தார், அவள் மனம் மாறவில்லை. தினமும் அவர் காளியம்னிடம் மனமுருகி அழுது தனக்கு பிள்ளைப் பாக்கியம் தரும்படியும் மனைவியன் போக்கு மாறும்படியும் வேண்டினார். அவர் வேண்டுகோள் ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் மனைவியின் குணம் மட்டும் மாறவில்லை.

பூசாரி குடும்பத்துக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர் மனைவியின் கவனம் முழுவதும் குழந்தையை பராமரிப்பதிலேயே சென்றது. கோயில் பணிகளை முற்றாகப் புறக்கணித்தாள். குழந்தை தவழத் தொடங்கயது. கோயிலுக்கு வந்து பக்தர்கள் குழந்தையின் அழகைப் பார்த்து வியந்தனர். அதன் முகத்தில் ஒரு வித அருள் இருப்பதைக் கண்டார்கள்.

ஒரு நாள் பூஜாரி பூஜை செய்யப் பிரசாதங்களுடன் புறப்பட்டார். அன்று அவ்வளவுக்கு கோயிலில. கூட்டமிருக்கவில்லை. வீட்டு வேலை அதிகம் இருந்த காரணத்தால் அவர் மனைவி, குழந்தையைச் சற்று நேரம் கவனித்து கொள்ளும் படி கணவனை வேண்டியபின்னர் கோயிலில் விட்டு விட்டுச் சென்றாள். குழந்தையை அவள் அங்கே விட்டுச் சென்றதை அவர் வேலையில் ஈடுபட்டிருந்ததால் கவனிக்கவில்லை.  பூஜை முடிந்து மூலஸ்தான அறைக்கதவை முடிவிட்டு வெளியே வந்தார் பூசாரி. அதே சமயம் குழந்தையை எடுத்துச்செல்ல அவர் மனைவியும் வந்தாள். குழந்தையைக காணாது பதறிப்போனாள் அவள்.

“எங்கே எங்கள் குழந்தை? உங்களை கவனிக்கச் சொல்லிவிட்டுச் சென்றேனே “என்று கணவனைப் பார்த்து சத்தம் போட்டாள்.

“நீ குழந்தையை கோயிலில் விட்டு சென்றது எனக்குத் தெரியாது. நான் காளி பூசையில் முழுக் கவனம் செலுத்தினபடியால் நீ சொல்லிச் சென்றது எனக்கு கேட்கவில்லை” என்றார் பூசாரி.;

மனைவிக்கு அவர் பதில் கோபத்தைக் கொடுத்தது. ஒரு சமயம் என் அழகிய குழந்தையை உங்களுக்குத் தெரியாமல் யாரோ தூக்கிச் சென்று விட்டார்களோ. நீங்களும் ஓரு தந்தைiயா” என்று கோபத்தில் கணவனைத் திட்டினாள். பார்த்துக்கொண்டு நின்றவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

“கொஞ்சம் பொறு. குழந்தையை நீ இங்கு விட்டிருந்தால் ஒரு வேலை தவழ்ந்து மூலஸ்தானத்துக்குள் போய் இருக்கலாம். நான் கதவை திறந்து உளளே சென்று பார்க்கிறேன் என்று போய் கதவைத் திறந்தார். கதவைத்த திறக்க முடியவில்லை. பதறிப்போய் கதவின் சாவித் தூவாரத்தினூடாக உள்ளே பார்த்தார். அவர் கண்ட காட்சியை அவரால் நம்பமுடியவில்லை. அவரின் குழந்தை பத்திரகாளியின் கைகளில் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. அதன் வாயில் இருந்து பால் வடிந்து கொண்டிருந்தது. எப்படி குழந்தை பத்திரகாளி சிலையின் கைகளுக்கு மாறியது? இது என்ன அதிசயம் என்று நினைத்து மனைவியிடம் “நீ ஒன்றுக்கும் யோசிக்காதே உன்னுடைய குழந்தை பத்திரமாக காளியின் கையில் இருந்து பால் குடிக்கிறாள். நீ வந்து சாவித்தூவாரத்தினாடகப் பார். அப்போது புரியும் உனக்கு” என்றார் பூசாரி.

மனைவி போய் தூவாரத்தினூடகப் பார்த்த போது அவளுக்கு பயமும் கோபமும் வந்தது. “ஏய் காளி என் குழந்தையை ஒன்றும் செய்யாதே. என் குழந்தையை விட்டு விடு” என்று கூக்குரலிட்டாள்.”:

பதிலுக்கு உள்ளே இருந்து “உன் குழந்தை என்னோடு விளையாடுகிறாள். அவளை நான் பார்த்து கொள்கிறேன். நாளை வந்து குழந்தை பெற்றுக் கொள்” என்ற அசரீரி வாக்கொன்று கேட்டது.

பூசாரி மனைவிக்கு அதைக் கேட்டவுடன் மேலும் கோபம் கூடியது. பேசத்தகாத தூஷண வார்த்தைகளால் கணவன் தடுத்தும் கேளாது பத்திரகாளியைத் திட்டத் தொடங்கினாள். அவ்வளவுக்கு குழந்தை மேல் உள்ள பாசம் அவளுக்கு. பல ஊர்வாசிகள் அவள் போட்ட சத்தம் கேட்டு கூடிவிட்டனர். ஆவர்களும் காளியை திட்ட வேண்டாம், குழந்தைக்கு ஒன்றும் நடக்காது என்று சொல்லிப்பார்த்தார்கள். அவள் திட்டுவதை நிறுத்தவில்லை. கதவை திறக்கப் பார்த்தார்கள் முடியவில்லை. உள்ளே பார்த்தார்கள் ஒரே இருட்டாக இருந்தது. பூசாரியின் மனைவி கதறி அழுது களைத்துப் போய் அறைவாசலில் படுத்துவிட்டாள்.

மறுநாள் காலை அறை கதவு வழியாக இரத்தம் கசிந்திருந்ததை கண்ட பூசாரி பதறி அடித்துக்கொண்டு போய் அறையை திறந்த போது, அறைக்குள் அவர் கண்ட கோரக் காட்சி அவரை திகைக்க வைத்தது. குழந்தைiயின் உடல் கிழிக்கப் பட்டு, நிலத்தில் உயறற்று குழந்தை கிடந்தது. பத்திரகாளியின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது. மனைவியின் நடத்தை அவ்வளவுக்கு பத்திரகாளியின் கோபத்தைத் தூண்டிவிடும் என்ற அவர் நினைத்திருக்கவில்லை. வாசிலில் கிடந்த மனைவியை தட்டி எழுப்பினார்.

“அதோ பார் நீ பேசின கெட்ட வார்த்தைகளால் என்ன நடந்திருக்கிறது என்று. காளியின் உக்கிரகத்தை நீ அறியவில்லையா. குழந்தை தன்னோடு விளையாடுகிறது, பிறகு திருப்பித் தருகிறேன் என்று சொல்லியும் நீ கெட்டகவில்லையே. இப்போ குழந்தையை பறிகொடுத்து விட்டு நிற்கிறாய்” என்றார் பக்கத்தில் நின்ற காளி பக்தர் ஒருவார். பூசாரியின் மனைவி பேச வாயெடுத்தாள், ஆனால் வார்த்தைகள் வெளியே வரவில்லை. குழந்தையின் உடல் இரண்டாக கிழிபட்டு இரத்த்தில் உறைந்து கிடந்தது அவளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அவள் ஊமையானாள்.

இச் சம்பவம் வெகு காலத்துக்கு முன் நடந்தாக மரபு வழியாக இக் கதை அப்பகுதிமக்களால் சொல்லப்பட்டு வருகிறது. இது எவ்வளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரமில்லை.

♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book