11

Poothathamby2
மரபுக் கதை 6

 

பூதத்தம்பி கதை

             

பூதத்தம்பி கதை நாடகமாக பல தடவை மேடை எறியுள்ளது. சங்கிலியன், பண்டார வன்னியன் போன்ற சரித்திர வரலாற்று நாடகம் போன்று பிரபல்யமான நாடகமது. டொன் லூயிஸ் பூதத்தம்பி என்பவர் கைலாய வன்னியனின் சகோதரியை மணம் முடித்தவர்.

அக்காலத்தில் பெரும் பதவிகளில் உள்ளவர்கள் அவசியம் மதம் மாறி கிறிஸ்தவர்களாக இருந்தாகவேண்டும் என்பது ஒரு காலத்தில் அட்சியில் இருந்த ஒல்லாந்து அரசின் நியதி.

ஒல்லாந்தர், போர்த்துக்கேயர்களிடமிருந்து யாழ்ப்பாண ஆட்சியைக் கைப்பற்ற பூதத்தம்பி என்ற வேளாளனும் அந்திராசி கரையார் (குரு குல தலைவனும்) பெரிதும் துணைபோனார்கள். அவர்கள் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக ஒல்லாந்தர் தாம் ஆட்சி செய்ய ஆரம்பித்த போது சிறைப்பகுதிக்கு பூதத்தம்பியையையும். நிர்வாகப் பகுதிக்கு அதிகாரியாக டொன் மனுவேல் அந்திராசியையும் அதிகாரிகளாக 1658 இல் நியமித்தனர். அவர்கள் இருவருக்கும் முதலி பட்டம் வழங்கப்பட்டு மந்திரிகள் போல் சகல அதிகாரங்களும் கொடுக்கப் பட்டது.

பூதத்தம்பி முதலியும் அந்திராசியும் உற்றாண்மை நண்பர்கள். ஒரு நாள் தனது மாளிகையில் தான் நடத்திய விருந்தொன்றுக்கு தன் நண்பன் அந்திராசியை விருந்தினராக வரும்படி அழைத்திருந்தான் பூதத்தம்பி. பெண்கள் விஷயத்தில் அந்திராசியின் பெலவீனம் அவ்வளவுக்கு பூதத்தம்பிக்கு தெரிந்திருக்கவில்லை.  தன் நண்பனுக்கு ஓர் அறையில் தனிமையாக போசனம் படைப்பித்து இரு ஏவலாளர்களை அவனுக்கு வேண்டியதைச் சரிவரக் கவனிக்கும் படி கட்டளையிட்டு மற்றைய விருந்தினர்களைக் கவனிக்கச் சென்றான் பூதத்தம்பி. பூதத்தம்பியின் மனைவி அழகவல்லி பெயருக்குகேற்ற அழகான தோற்றமுள்ளவள். வன்னியர் குலத்தவள். அவளது அழகே கணவனின் உயிருக்கு ஆபத்தாக அமைந்தது.

விருந்து நடந்த தினத்தன்று விருந்தினர்கள் சரியாக உபசரிக்கப் படுகிறார்களா என்பதைக் கவனிக்கும் எண்ணத்தோடு மேற்பார்வை செய்து கொண்டு போகும் போது அந்திராசி உணவருந்திக் கொண்டிருக்கும் அறைக்குள் அழகவல்லி சென்றாள். உணவு பரிமாறுபவர்களை அழைத்து குறைவில்லாமல் அந்திராசிக்கு உணவு, உண்டிவகைகளை படைக்கும் படி கட்டளையிட்டுப் போனாள்.

அந்திராசிக்கு பெண்கள் மேல் எப்போதும் சபல மனம். அதுவும் அழகிய பெண்கள் என்றால் கேட்கவும் வேண்டுமா? பிறர் மனைவியைத் தன் தாயைப் போல் மதிக்கும் குணம் அற்றவன் அந்திராசி. அழகவல்லியின் முகத்தழகையும் உடலகையும், நடையழகையும், கவர்ச்சியான பார்வையையும், குரலழகையும் கண்ட அந்திராசி மெய்மறந்து போனான். தன் நண்பனுக்கு இப்படி ஒரு அழகிய மனைவி இருக்கிறாள் என்பது அவனுக்கு அப்போது தான் தெரியவந்தது. பார்த்ததும் அவள் மேல் அவனக்குத் தணியாக் காதல் ஏற்பட்டது. அவளுடன் எப்படியும் உடலுறவு வைத்தாக வேண்டும் என்ற எண்ணம் அத்தீயவன் மனதில் தோன்றிற்று. அருந்திய விருந்தெல்லாம் அவனுக்கு வேம்பாயிற்ற. பரிசாரகர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாது அவனது எண்ணம் எல்லாம் வந்து சென்ற அழகவல்லி மேல் இருந்தது. சற்று நேரத்துக்குப் பின்னர் சுய நினைவுக்கு வந்த அந்திராசிக்கு மேலும் உணவு உண்ண விருப்பமிருக்கவில்லை. கைழுவியபின்னர் பூதத்தம்பியோடு சற்று உரையாடி, அதன் பின்னர் தாம்பூலம் தரித்து வீடு திரும்பினான். திரும்பும் வழியில் அவனது சிந்தனைகள் எல்லாம் அழகவல்லிமேல் இருந்தது.

வீடு திரும்பிய அந்திராசி பூதத்தம்பியின் மனைவி அழகவல்லிக்கு விலையுயர்ந்த பரிசுகள் வழங்கத் திட்டமிட்டான். தங்கக் காசுகளையும், வாசனைத் திரவியங்களையும், பட்டுப் பட்டாடையும். ஒரு சந்தனப்பெட்டியில் வைத்து “இதனைக் கொண்டு போய் பூதத்தம்பியின் மனைவி அழகவல்லியிடம் எவருக்கும் தெரியாதவாறு நான் தந்ததாக கொடுத்துவா. அதோடு அவளை நான் சந்தித்து உறவாடு ஏற்ற காலமெது என்றும் அறிந்து வா” என தூதுவனிடம் சொல்லிக் கொடுத்தனுப்பினான் அந்திராசி. தூதுவனும். பூதத்தம்பி இல்லாத சமயம் பார்த்து அழகவல்லியைச் சந்தித்து பரிசுகளைக் கொடுத்து அந்திராசியின் விருப்பத்தைத் தெரிவித்தான். அழகவல்லி அதைக் கேட்டு கடும் சினம் கொண்டாள். அந்திராசிக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணி தூதுவன் கொண்டு வந்த தாம்பாளத்தில் ஒரு செருப்பை வைத்து இதனை அந்தப் பாதகனுக்கு என் பரிசெனக் கொடு என்று கண்டித்து அனுப்பினாள்.

தூதுவன் திரும்பி வந்து சொன்ன செய்தியையும் கொடுத்த செருப்பையும் கண்ட அந்திராசி சினம் கொண்டான். “எனது அதிகாரம், எனது குணம், எனது பலம், தெரியாது இவள் என்னை அவமானப் படுத்திவிட்டாள். இவளுக்கு நான் நல்ல பாடம் கற்பிக்கிறேன்” என மனதுக்குள் கறுவிக்கொண்டான் அந்திராசி. அவள் செருக்கை அடக்கச் சமயம் பார்த்திருந்தான்.

நடந்ததை கணவனுக்குச் சொல்லி அந்திராசிக்கும் பூதத்தம்பிக்கும் இடையேயுள்ள நற்பை பகையாக்கி பிரச்சனையைப் பெரிதாக்க அழகவல்லி விரும்பவில்லை.

இந்த சம்பவம் நடந்து சில தினங்களில் அந்திராசி திட்டம் போட்டு பூதத்தம்பியடம் போய் வெறும் காகிதம் ஒன்றை நீட்டி “கச்சாய் துறைமுகத்திற்கு சில மரக்களங்களுக்கு கட்டளையனுப்பவேண்டும். மரக்களங்கள் எத்தனை என்று கணக்கெடுத்து உடன் வாசகம் எழுதிக் கொள்வேன்.  பின்பு உமக்கு நேரமிருக்காது. இந்த வேற்றுக் காகிதத்தில் உமது கையொப்பமிட்டுத் எனக்குத் தாரும். உடனே நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்”. என்றான். பூதத்தம்பி தன் நண்பன் மேல் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக அவன் நீட்டிய வேற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தான் பூதத்தம்பி. அந்திராசி தனது பழிவாங்கும் திட்டத்தை முடிக்க முதல் படி தாண்டியாகிவிட்டது என நினைத்தவாறு வீடு திரும்பி உடல்வாசகத்தில் பறங்கியர் தலைவனுக்கு ஒல்லாந்தருக்கு எதிராகத் துணைபுரிவதாக வாசகம் ஒன்றை எழுதி. அதனை தூதுவன் ஒருவன் பறங்கியர் தலைவனுக்கு எடுத்துச் செல்லும் போது தான் ஐயுற்று பிடித்தாகச் சொல்லி ஒல்லாந்த தேசாதிபதிக்கு கடிதத்தைக் காட்டி முறைப்பாடுசெய்தான். முதலில் தேசாதிபதி அக்கடிதத்தைப் பொய்யெனக் கருதி முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் அந்திராசியோ விட்டதாயில்லை. “இக்கடிதத்தில் எழுதியுள்ளதை நீங்கள் நம்பி பூதத்தம்பி மேல் தக்க நடிவடிக்கை எடுக்காவிட்டால் ஒல்லாந்தர் ஆட்சிக்கு பறங்கியர்களால் தீங்கு ஏற்படின் அதற்கு பொறுப்பு நீங்களே” என தூபமிட்டான் அந்திராசி. அதனைக் கேட்ட தேசாதிபதி பயத்தினால் தக்க விசாரணையின்றி பூதத்தம்பிக்கு மரணதண்டனை விதித்தான்.

ஊர்காவற்துறை கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்த தேசாதிபதியின் தம்பிக்கு பூதத்தம்பியுடன் நட்புறவு இருப்பதை தெரிந்த அந்திராசி மரணதண்டனை செய்தி அவனுக்கு தெரிந்தால், சிலசமயம் தேசாதிபதியுடன் அவன் பேசி தண்டனையை மாற்றலாம் எனக் கருதி, கால தாமதமின்றி பூதத்தம்பிக்கு மரணதண்டனையை அவசரம் அவசரமாக நிறைவேற்ற வழிவகுத்தான். பூதத்தம்பிக்கு மரணதண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

கணவன் அநியாயமாய் கொலைசெய்யப்பட்டதை அறிந்த அழகவல்லியும் உடனே உயிர் நீத்தாள். பூதத்தம்பியின் மைத்துனான கைலாய வன்னியன் அதனைக் கேள்விப்பட்டு கொழும்புக்குச் சென்று மகா தேசாதிபதிக்கு நடந்த உண்மையைச்; சொல்லி முறையிட்டான்.  உடனே யாழ்ப்பாணத்து தேசாதிபதியையும் அந்திராசியையும் பிடித்துவரும்படி மகாதேசாதிபதி சேவகர்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் யாழ்பாணத்து தேசாதிபதியைக் கடல் மார்க்கமாகவும. அந்திராசியை தரைமார்க்கமாகவும் கொண்டு சென்றார்கள். கப்பலில் சென்ற தேசாதிபதி தனக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் கடலில் குதித்து தன்னுயிரைப் போக்கிக் கொண்டான். அந்திராசி தரை மார்க்கமாக செல்லும் போது பண்டாரத் தோப்பென்ற முசலிக்கு பக்கத்தில் உள்ள காட்டில் யானையடித்து மரணத்தைத் தழுவினான்.

அந்திராசி தமிழனல்ல அவன் ஒரு சிங்களவன் என்பது பல்டேயஸ்பாதிரியார் கருத்து. பூதத்தம்பியின் கதைபற்றி மதசார்பான பல கருத்து வேற்றுமைகள் நிலவியது. சோதிநாதன் என்பவன் பூதத்தம்பியின் ஏகப் புத்திரன். அவனுடைய மகள் பூதனாராய்ச்சி. புதத்தம்பியின் முன்னோரிடம் புவேனக்கபாகுவின் பதக்கம் ஒன்றிருந்தது. அப்பதக்கம் சந்ததி சந்தியாக கையளிக்கப்பட்டு பூதனாராய்ச்சி காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு கையளிக்கப்பட்டது. அப்பதக்கத்தை இன்றும் அக்கோயிலில் காணலாம். பூதத்தம்பி இருந்தவிடம் பூதனாராய்ச்சி வளவென நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகே இருக்கிறது.

                                ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book