10

Udappu2மரபுக் கதை 5

உடப்பூர் கதை

 

ஊருக்கு ஊர் மரபு வழி வந்த கதைகள் ஏராளம். அக்கதைகள் பெரும்பாலும் அவ்வூரில் நடந்த சம்பவத்தை அல்லது கோயிலை அல்லது பகுதியின் பெயரை அல்லது அவ்வூரில் ஓடும் ஆற்றின் பெயருடன் தொடர்புள்ளதாகயிருக்கும். உடப்பு என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பது தீக்குளிப்பு திருவிழாவும், கரப்பந்தாட்டமுமே. உடப்பு கிராமம், வடமேல் மாகாணத்தில், கொழும்பு புத்தளம் வீதியில் பத்துளு ஓயாச்சந்தியிலிருந்து வடமேற்காக 4 மைல் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 3000 குடும்பங்கள் இவ்வூரில் வாழ்கின்றன. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள். இவ்வூரின்; தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும். கிழக்கே ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்காலும், வடக்கே இவ்வூரார் வாழும் ஆண்டிமுனைக் கிராமமும்.  மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படும். கொழும்பையும் புத்தளத்தையும் இணைக்கும் நீர்பாதையாக ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. முற்காலத்தில் சரியான பாதைபோக்குவரத்து இல்லாத காரணத்தால் இவ்வாய்க்கால் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஆண்டிமுனையில், கடற்கரையோரத்துக்கு அன்மையில் நன்னீர் ஊற்றுகளும் குளிக்கும் கிணறுகளுமுண்டு. இவ்வூருக்கு அண்மையில் உள்ள பத்துளு ஓயாவென்ற ஆற்றின் முனையில் உள்ள மண்ணை நீக்க உடைப்பு ஏற்படுத்தி ஆற்றின் வெள்ள நீர் கடலுக்குபாச்சுவதன் மூலம் புத்தளம் முதல் ஆனைவிழுந்தாவ பிரதேசங்கள் வரையுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்படுகின்றன. ஆற்றின் முனையில் உள்ள உடைப்பே பின் மருவி உடப்பாகியதென்பது பலர் விளக்கம்.

உடப்பு மக்கள் குடியேறிய இடத்தில் காடுகள் நிறைந்திருந்தன. தமிழ் அகராதியில் உடப்பு என்ற சொல்லுக்கு “தொரட்டு முற்காடு “என இருக்கிறது. முன்னைய காலத்தில் வெள்ளம் தானாக உடைத்து பாய்வதால் அவ்விடத்தை உடைப்பு என்றும் பின் அது மருவி “உடப்பு” என பெயர்பெற்றிருக்கலாம். இது பொறுத்தமான பெயர் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் வெள்ள நீரை வெட்டிபாயச்சுவதற்கு இன்றும் “அறுவாய்” வெட்டுதல் என்றுதான் அழைப்பர்.

உடப்பு மக்கள் தென்னிந்திய மறவர் குல மக்களின் பரம்பரை எனக் கூறப்படுகிறது. இவர்கள் நெய்தல் நில மக்கள். செம்பலிங்க உடையார் தன் குறிப்பொன்றில் பின் வருமாறு கூறியுள்ளார். 1664ம் ஆண்டு தென்னிந்தியாவை முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது.  16ஆம் நூற்றாண்டில் மதுரை மங்கம்மாவுக்கும் இராமநாதபுரம் இராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்துக்கு பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் புலம் பெயர்ந்து கற்பிட்டி ஆனவாசல் முதல் கலாஓய வரை குடியேறினர் இவர்கள் வீரமிக்க திடகாத்திரமான மக்கள். மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு காலத்தில் செழித்து திகழ்ந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இவர்கள் தங்கள் குல தெய்வம் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். மீன் பிடித்தலும் முத்துக்குளித்தலும் இவர்கள் தொழில். உடப்பில் திரௌபதையம்மன், காளியம்மன் முத்துமாரியம்மன், ஸ்ரீ ஐயனார் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் அமைத்து வணங்கத் தொடங்கினர். ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம் அமைந்துள்ள இடத்துக்கு மேற்கே மாங்குண்டு என்றழைக்கப்படும் இடம் உண்டு.

குருகுல வழிவந்த வர்ணகுலவாசிகளான இவ்வூர்வாசிகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிதொழிலையே நம்பி வாழும் கரவர்கள். இவர்களது குலத் தலைவனுக்கு கமலக்கன்னி என்ற பெயருடன் ஒரு அழகிய மகள் இருந்தாள். அவள் அழகில் சொக்கி பலர் பெண் கேட்டு வந்தனர். அதற்கு குலத்தலைவன் தன் மகளுக்கு ஏற்ற கணவன் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்டுவந்த பலருக்கு மறுப்பு தெரிவித்து அனுப்பினான்.  மறவர் குல தலைவன் ஒருவன் கமலக்கன்னியின் அழகைப் பற்றி கேள்விப்பட்டு பெண் கேட்டு தூது ஆனுப்பினான்.

“மறவர்கள் என்றாலே சண்டைக்குப் யெர் பெற்றவர்கள் இவர்களுக்கு நான் எவ்வாறு என்மகளை கொடுக்க முடியும். கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது போல் அல்லவா நான் அவளை மரவனுக்குத் திருமணம் செய்துவைத்தால் இருக்கும்” என மறுப்பு தெரிவித்தான் கரவர் குல தலைவன்.

ஆனால் மறவர் தலைவன் தன் முயற்சியை விடவில்லை “உன் மகளை எனக்குத் துணையாக்காவிடில் அதனால் உன் குலத்திற்கு ஏற்படும் அழிவிற்கு நீயே பொறுப்பு என பயமுறுத்தினான். மரவர் தலைவன்.

ஏன் என் மகளால் என் குலமக்கள் பாதிக்கப் படவேண்டும் என்று யோசித்த கமலக்கன்னியின் தந்தை ஒருவாறாக மகளின் திருமணத்துக்கு ஒப்புதல் கொடுத்தான். அந்தக் கால வழக்கத்தின் படி கலியாணத்திற்கு பந்தல் கால்களையும் நட்டு திருமண மண்டபத்தையும் அமைத்தான்.

மணமகன் திருமணத்திற்கு வரும் முதல் நாளே தன் மகளுடனும் தனது மக்களுடனும் அவ்வூரைவிட்டு ஓடி மறைந்தான். திருமணத்துக்கு வந்த மரவர் தலைவனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. பெண்ணுக்கு பதிலாக ஒரு பெண் நாயை மணப்பந்தல் காலில் கட்டியிருந்ததை கண்டு படு கோபமுற்றான். தனக்கு எற்பாட்ட அவமானத்தை நினைத்து படு கோபம் அடைந்தான். கமலக் கன்னியைத் தேடி பொன மறவர் தலைவனுக்கு திரும்பவும் ஒரு ஏமாற்றமே காத்திருந்தது. மறவர் தலைவன் தனது படையுடன் வர முன்னரே கமலக்கன்னியை அவளது சம்மதத்துடன் கடலில் மூழ்கடித்து அவளது உயிரைப் போக்கினார் அவளது தந்தை. அவ்வாறு கடலன்னைக்கு கற்பைக் காப்பதற்காக பலிகொடுக்கப்பட்ட கமலக் கன்னியே கரவர் குல மக்களின குல தெய்வமாக வணங்கப்பட்டாள். இது போன்று வேறு ஒரு கதையும் உண்டு.

புத்தளம் பிரதேசத்தில் முக்குவர் இனத்தவர்கள் பிரசித்தமாக இருந்த காலமது. வட பகுதியல் வேதியரசன் என்பவன் முக்குவ தலைவானாகயிருந்தான். இவனே நெடுந்தீவின் மேற்குப்பகுதியான கோட்டைக்காடு என்ற இடத்தில ஒரு காலத்தில் இராசதானியமைத்து பிரதானிகள, படைவீரர்களுடன் ஆட்சி செய்தவன். இவ்விடம் இப்போது “கட்டக்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முஸ்லீம்கள்; பெரும்பாலோர் இவ்வூரில் வாழ்கிறார்கள். பின்னர் அங்கீருந்து விரட்டப்பட்டு புத்தளத்துக்கு வடக்கேயுள்ள குதிரைமலைப் பகுதியில் அரசாண்டவன். புத்தளத்தின் தெற்குப்பகுதியல் உடப்பு உற்பட கரவர்களுக்கு தலைவானாக மாணிக்கத்தலைவன் இருந்தான். வேதியரசனுக்கும் மாணிக்கத் தலைவனுக்டகுமிடையே பலகாலமாய் பகையிருந்து வந்தது. மாணிக்கத் தலைவன் தன் மகளை வேதியரசனுக்கு மணமுடித்து வைக்க தூது அனுப்பிய போது, வேதியரசன் மறுப்புத் தெரிவித்தான். அதனால் இரு பகுதிகளும் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்நேரம் முக்குவரின் படைப் பலம் குறைவாக இருந்தபடியால் குதிரைமலை பகுதியில் குதிரை வியாபாரத்துக்கு வந்திருந்த அரேபியர்களின் உதவியை அவன் நாடினான். அதற்கு உடன்பட்ட அரேபியர் முக்குவர்களுடன் சேர்ந்து கரவர்களுடன் மோதினார்கள். உடப்பூருக்கு அருகாமையில் உள்ள மங்கள வெளிக்கும் கட்டக்காடு என்ற கிராமத்துக்கும் இடையே இருந்த சமவெளியில் யுத்தம் நடந்தது. இப்போரில் மாணிக்கத்தலைவன் கொல்லப்பட்டான்.  அவனைப் புதைத்த இடத்திற்கு அருகே ஒரு கறையான் புற்றிருந்தது. அப்புற்றை மாணிக்கன் புற்று என இப்போதும் அழைக்கின்றனர். இப்போரில் முக்குவர் பெரும் வெற்றியடைந்தனர். அரேபியருக்கு நன்றிக் கடனாக முக்குவர் அனைவரும் இஸ்லாம் மதத்தை தழுவினர். ஆனால் பின்னர் போhத்துக்கேயரின் வருகைக்குப் பின்னர் அவர்களின் நன்மதிப்பையும் அவர்கள் கொடுத்த சலுகைகளையும் பெறுவதற்காக பல முக்குவர்கள்; கத்தோலிக்கராக மாறினார்கள்.

                                                            ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book