8

Baurva Kanda(1)

மரபுக் கதை 3

 வைரவர்மலை இரகசியம்

1469ம் ஆண்டு முதல் 1815 ம் ஆண்டு வரை கண்டி இலங்கையின் மலைநாட்டு இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. கடல்மட்டத்துக்கு 1629 அடி உயரத்தில் உள்ள இந்த நகரத்தைப் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் கைப்பற்றமுடியாது போயிற்று. ஆனால் பிரித்தானியாகள். சூழ்ச்சி செய்து மன்னருக்கு அதிகாரிகளாக கடமையாற்றிய துரொகிகளின் உதவியுடன். 1815ல்; கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியதாக வரலாறு கூறுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன். அம்மன்னன் நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த தமிழ் மன்னன். இம்மன்னனின் நான்கு அதிகாரிகள் பிரித்தானியரிடம் சரண்அடைந்த போது கண்டியில் பிரித்தானியர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையில் தமிழிலில் மட்டுமே பத்திரத்தில் கையொப்பம்மிட்டார்கள். அவனோடு சில அதிகாரிகளும் தமிழில் கையொப்பமிட்டனர். இதன் பிரதி இன்றும் கொழும்பு நூதனசாலையில் உண்டு.

கண்டி நகரம் ஒரு காலத்தில் செங்கடகல என்ற பெயரில் திகழ்ந்தது. “செங்கட” என்ற துறவி அங்கு மலை யொன்றில் வாழ்ந்ததினால் அப்பெயர் வந்ததென்பர். ஆனால் காலப்போக்கில் “மகாநுவர” என்ற சிங்களப் பெயரில் அந்நகரத்தை சிங்களவர் அழைக்கத் தொடங்கினர். மகாநுவர என்பது மேன்மைவாய்ந்த நகரம் என்பதாகும். ஆனால் மலைகள் சார்ந்த நகரமாகையால் கண்டி என்ற பெயர் “கந்த” என்பதில் இருந்து தோன்றியது என்பது பலரது கருத்து. சிங்களத்தில் கந்த என்றால் மலை என்பது அர்த்தமாகும். “கந்தன்” முருகனைக் குறிக்கும். குன்றத்தில் இருக்கும் கந்தனுக்கும் கந்தவுக்கும் தொடர்புண்டு.

பைரவர் காட்டுக்குத் தெய்வமல்ல. கிராமத்தின் காவல் தெய்வமாகவும் பாதாள உலகத்தில் உள்ள போக்கிஷத்தைக் காப்பவராக இலங்கையில் சிங்கள மக்கள் வைரவரை கருதுகிறார்கள். இலங்கையில் பைரவர் வழிபாடு தமிழ், சிங்கள மக்களிடையே பொதுவான வழிபாடாகும். வைரவருக்குப் பொங்கல், வடைமாலை, பலி பொன்ற சடங்குகள் வடபகுதியில் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் காலப்போக்கில் வைரவர் கோயில்களில் ஆடு, சேவல், பலி கொடுப்பது முன்னேஸ்வரம் காளி கோயிலில் பிரச்சனை உருவாக முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது. பெரும்பாலும் வைரவர் கோயில்கள் தோற்றத்தில் சிறியவை. சூலத்தை சின்னமாக பாவித்து பைரவரை வணங்குவார்கள். சிவனின் கோப நிலையே பைரவர் என்கிறது ஐதீகம்.

இந்த தெய்வத்தின பெயரில் கண்டி நகரத்தில் வைரவர் மலை என்றுண்டு. அம்மலையில் முக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த இயக்கர்களால் போக்கிஷங்கள் புதைக்கபட்டிருப்தாகவும் அதை காக்க வைரவர் அங்கு குடியிருப்தாகவும் பலரின் நம்பிக்கை. அம்மலையில் அக்காலத்தில் முற்பதர்களும் அடர்ந்த செடிகளும் நிறைந்து இருந்தன. சிறுத்தை, நரி. கரடி. ஓநாய் போன்ற வனவிலங்குகள் அங்குவாசம் செய்ததினால் மக்கள் அப்பகுதிக்குப் போக அஞ்சினர். வைரவர் வழிபாட்டினை கண்டி இராச்சியத்தை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் கடைப்பிடித்து வந்ததால் இம்மலை சரித்திர வரலாறு பெற்றது.

கிரேக்க தேசத்து அட்லஸ் தெய்வத்தைப் போன்று வைரவர் தெய்வம் கருதப்பட்டது. வருடா வருடம்; பைரவருக்கு நரபலி கொடுப்பது அவசியம், இல்லையேல் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாக வேணடிவரும் என்ற பயம் அக்கால கண்டி இராச்சிய மக்களிடம் இருந்தது. அவர்கள் பௌத்தர்களாகயிருந்தாலும் பத்தினி தெய்யோ, ஸ்கந்த தெய்யோ, வைரவ தெய்யோ, விஷ்ணு தெய்யோ என இந்துக் கடவுள்களையும் வணங்கிவந்தனர். இதற்கு அவர்களை ஆண்ட மன்னன் பிறப்பில் இந்துவாக இருந்ததே காரணமாகும். வைரவருக்கு நரபலி கொடுக்காவிட்டால் பருவகாலங்கள் பாதிக்கப்பட்டு மழையில்லாது வரட்சி ஏற்படும் என கண்டி இராச்சியத்தில் வாழ்ந்த விவசாயிகளின் நம்பிக்கை. வைரவர் மலை, கண்டி இராச்சியத்துக்கு அன்னியரின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து வந்தபடியால் அப்பாதுகாப்பினை பைரவரே வழங்கி வந்தார் என எல்லோhரும் நம்பினர். சுமார் 500 வருடங்களுக்கு மேலான வரலாற்றினை இம்மலை கொண்டுள்ளது. சுமார் 650 அடி உயரமுள்ள இம்மலை இன்று கண்டி நகரத்திற்கு செல்லும் எல்லோரினதும் பார்வையிலும் அம்மலை உச்சியில் உள்ள 80 அடி வெள்ளை நிற புத்தர் சிலை தான் தென்படும்.

இம்மலை பற்றிய குறிப்பு 17ம் நூற்றாண்டில் அஸ்கிரி தல்பொத்த என்ற ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. கண்டி இராச்சியத்தை உருவாக்கிய விமலதர்மசூரிய என்ற மன்னன் போர்த்துக்கேயரின் தாக்குதலில் இருந்து கண்டியைக் காப்பாற்ற காவல் கூண்டுகளை பல பகுதிகளில் அமைத்தான். அதில் வைரவமலை முக்கியயிடம் வகித்தது. அம்மன்னனுக்குப் பின்னரும் இராச்சியத்தின் பாதுகாப்புக்கு மலை பாவிக்கப்பட்டது.

ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் ஆட்சிகாலத்தில் அவனது ஆட்சிக்கு எதிராகப் பல அதிகாரிகள் பிரித்தானியருடன் சேர்ந்து சதி செய்ய ஆரம்பித்தனர். மக்கள் மனதில் பீதியை உருவாக்க வைரவருக்கு பலி கொடுக்கும் சடங்கினை மன்னன் அறிமுகப் படுத்தினான். வைரவருக்க கொடுக்க வேண்டிய பலி கொடுக்கப்படாததால் இராச்சியத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற வதந்தி பரவத் தொடங்கியது. அக்காலத்து பௌத்த சிங்கள மக்கள் இந்து மதக் கடவுள்களான கண்ணகி அம்மன், விஸ்ணு, ஆகிய தெய்வங்களை புத்தரோடு சேர்த்து விகாராக்களில் வணங்கியதால் இந்து சடங்கு முறைகளை அவர்கள் பின்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பலியிடும் சடங்கு ஆரம்பிப்பதற்கு இராணியே காரணமாகும். பிள்ளையில்லாத மலடியான இராணியின் கனவில் வைரவரைக் தான் கண்டதாகவும் தனக்கு நரபலி கொடுத்தால் குழந்தை பிறக்குமென மன்னனுக்கு இராணி சொன்னாள். குறிக்காரர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது இராஜ இரத்தம் ஓடும்; கன்னிப் பெண் ஒருத்திக்குப் பூஜை செய்து, மலையடிவாரத்தில் கொண்டு போய் பலி கொடுத்தால் குற்றம் அகலும் என்றான் குறிக்காரர். அதன்படி ஒரு கன்னிப் பெண்ணைத் தேடிப் பிடித்து பூஜைகளுக்குப் பின் ஒரு இரவு மலைக்கு அழைத்துச்சென்று அங்குள்ள காட்டு மரம் ஒன்றில் கட்டிவிட்டு வீடு திரும்பினார். அடுத்தநாள் போய் பார்க்கும் போது அப்பெண்ணின் உடல் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்தாள். வைரவர் தனது பசியைத் தீர்த்துவிட்டார் என்று மக்கள் நம்பினர். ஆனால் உண்மையில் மலையடிவாரக் காட்டில் இருந்த வன விலங்குகளுக்கு அப்பெண் பலியானது பலருக்கு தெரியவில்லை. பைரவர் மலையின் இரகசியம் பலருக்குப்   புதிராக இருந்தது. ஏன் கன்னிப் பெண் ஒருத்தியை பலிகொடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்பது பலருக்கு விளங்கவில்லை.

ஒரு ஆண்டு, தீடிரென கண்டி இராச்சியத்தில் வரட்சி ஏற்பட்டதால் பலி கொடுக்கும் சடங்கு முறை தீவிரம் அடைந்தது. இந்த சடங்கினை சரிவர செய்யும் பொறுப்பு துணவில என்ற அதிகாரி; ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது. இவனோ பெண் ஆசைகொண்டவன். ஒழுக்கமில்லாதவன். தான் ஒரு அரச கவி என்ற பிரமையை மக்களிடையே உருவாக்கி மன்னனின் நல் மதிப்பைப் பெற்றவன். இராச சபையில் இருந்து ஒரு அழகிய கன்னிப் பெண்ணை தெடிப்பிடித்து வரும் படி துணவில தன் ஆட்களை அனுப்பினான். தங்களுக்கு எதிரிகளானவர்களை பழி தீர்க்கும் முகமாக அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து வந்து பலி கொடுப்பார்கள். இப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட பெண் மன்னனுக்கு முன் அழைத்துச் செல்லப்பட்டாள். அவளைக் குளிப்பாட்டி, ஆடை ஆபரணங்கள் அணிந்து, வைரவ மலைக்கு கூட்டிச்சென்றனர்.

அந்த அழகியப் பெண்ணின் மேல் ஆசை வைத்தான் துணிவில. மலையில் மரம் ஒன்றில் பெண்ணை கட்டிப்போட்டு காவல்காரர்கள் திரும்பியவுடன் துணிவில இரகசியமாக அன்றிரவு மலைக்குப்போனான். இந்த முறையையே அவன் முன்னரும் கன்னிப் பெண்களைக் கற்பழிக்க பாவித்தது பலருக்குத் தெரியாது. அங்கு வந்த துணவல, அப் பெண்ணை கற்பழிக்க முயன்றபோது விறகு வெட்டி போன்று வேடம் போட்டு, அப்பெண்ணை காப்பாற்ற அவளைத் தேடி வந்த அவளின் காதலன் கண்டு விட்டான். துணவல பெண்ணினது காதலனின் கத்திக்கு இரையானான். பெண்ணை காப்பாற்றி, அவளுடன் கொழும்புக்கு ஓடித்தப்பினான் காதலன்.

மறுநாள் துணவில மலையில் இறந்து கிடந்த செய்தி மன்னனை அடைந்தது. அவன் இறந்த காரணத்தை மன்னன் அறிய அதிக நேரம் எடுக்கவில்லை. அவனைப்பற்றிய விபரம் பின்னரே மன்னனுக்குத் தெரியவந்தது. 1815ம் ஆண்டு பிரித்தானியர் இராச்சியத்தை கைபற்றிய பின்னர் அப்பெண்ணும் கணவனும் நிம்மதியாக கண்டி இராச்சியத்துக்கு திரும்பினர்.

சென்ற நூற்றாண்டின் மத்தியில் மலையில் உள்ள காடுகளைத் துப்பரவு செய்து அங்கு புத்தர் கோயிலையும் 80 அடி உயர புத்தர் சிலையையும் அம்பிட்டிய தாமானந்த என்ற புத்த பிக்கு ஸ்தாபித்தார். பைரவ மலையின வரலாற்று தொடர்பினை அஙகு வளர்ந்த உயர்ந்த மரங்களே நினைவூட்டிவையாய் இருந்தன. இப்போது உல்லாசப் பயணிகள் தங்குவதற்காக ஹோட்டல்கள் பல அப் பகுதியில் தோன்றி விட்டன.

             ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book