22

Nainativuமரபுக் கதை 17

 

 நாகதீபம் (மணிபல்லவம்)

 

                இலங்கையின் வடமகாணத்தில்., யாழ்ப்பாண மாவட்டத்தில் தென் மெற்குத் திசையில் அமைநத சப்பத தீவுகள் என அழைக்ப்படும் ஏழு தீவுகளில் நயினாதீவும் ஒன்று. இது வரலாறுகொண்ட தீவாகும். இதனை மணிபல்லவம் எனவும் ஆழைப்பார். இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் முக்கியமான தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 23 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு கிழக்கு திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கே அனலைதீவும் அமைந்துள்ளன. இரு நாக வம்ச அரசர்கிளிடையே மணியாசனத்தின உரிமைக்கு ஏற்பட்ட பிணக்கை தீர்த்து வைக்க புத்தர் இந்தத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் என்ற சிங்கள நூல் கூறினாலும் போதிய . ஆதரமில்லை. இத்தீவுக்குப் பல பெயர்களுண்டு.  இப்பெயர்கள் மரபு வழி வந்த கதைகளை அடிப்படையாக வைத்து தோன்றியவையாகும்.

இத்தீவுக்கு  நாகத்தீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லம், சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரதம் எனப் பெயர்களுண்டு. எத்தனைபெயர்கள் இருந்தாலும புலக்கத்தில் உள்ள பெயர் நயினாதீவாகும். ஹார்லம் (Harlem)  என்ற பெயர் டச்சுகாரர்கள் தமது யாழ்ப்பாண ஆட்சியின் போது இத்தீவுக்கு வைத்த பெயராகும் நாகதிவியன என்று இத்தீவை சிங்களவர் அழைப்பர்.

விஜயன் இலங்கைக்கு வரமுன்னமே நாகரசன் என்ற நாகர் இளத்தைச் சேர்நத மன்னன் இத்தீவில் ஆட்சி செய்தான். இவ்வரசனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகளும் இருந்தார்கள். தன் மகளை நாகராசன் என்ற மன்னனுக்கு மணமுடித்து வைத்து சீதனமாக தன் மணியாசனத்தை கொடுத்தான். அவர்களுக்கு குலோதரன் என்ற மகன் பிறந்தான். நயினாதீவு அரசன் நாகராசன் தான் இறக்க முன்பு தன் மகன் மகோதரனுக்கு பட்டம் கட்டிவிட்டு இறந்தான். மகோதரன் தான் மன்னனாதும் தன் மருமகன் குலோதரன் மீது மணி ஆசனத்தைப் பெறுவதற்காக போர் தொடுத்தான். இப்போர் நயினாதீவில் இடம்பெற்றது. போர் நடக்கும் போது அவர்கள் நடுவே புத்தர் தோன்றினார். அவர் தோன்றிய ஒளியினால் இரு நாகர்களும் பயந்தனர். புத்தர் இவர்களிடையே சமாதானத்தை நிலவினார். இரு நாகர்களும் புத்தரை வணங்கி அவரை மணியாசனத்தில் அமரச் செய்தனர். இதே கதையை மணிமேகலை என்ற காப்பியமும் சொல்கிறது. மணிஆசனம் இருந்ததினால மணிபல்லவம் என்ற பெயார் நயினாதீவுக்கு வநதிருக்கலாம்.

மணிமேகலைக்கும் மணிபல்லவம் என்ற நயியாதீவுக்கும் என்ன தொடர்பு? மணிபல்லவம் ஒரு சிறிய தீவு. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே 240 மைல் (முப்பது யோசனை) தூரத்தில் அமைந்திருந்தது என்று ‘மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது.

மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூறப்படும் தெய்வமும் இதுவே. சோழனுக்கும் பீலிவளைக்கும் பிறந்த குழந்தையை, புத்தமுனிவன், புகாரிடமிருந்து நாக நாட்டுக்கு வந்து தன்னை வழிபட்ட கம்பளச்செட்டி என்னும் வணிகனிடம் கொடுத்து, இக்குழந்தை சோழன் குழந்தை என்னும் வரலாற்றையும் கூறி, சோழனிடம் கொடுக்கச் சொன்னான். வணிகன் கம்பளச்செட்டி குழந்தையுடன் தாயகம் மீளும்போது அவனது மரக்கலம் புயலில் சிக்கிக் கவிழ்ந்துபோக, குழந்தை மாண்டது. நீந்திப் பிழைத்து வந்த வாணிகன், சோழ அரசன் வடிவேற்கிள்ளி என்பவனிடம் நிகழ்ந்ததைக் கூறினான். சோழன் குழந்தையைக் கடலிலும், கடற்கரையிலும், காடுகளிலும் தேடித் திரியும் துக்கத்தில் இந்திரவிழா கொண்டாட மறந்துவிட்டான். அக்காலத்தில் இந்திர விழா புகார் நகரிலும், நாகநாட்டு மணிபல்லவத் தீவிலும் கொண்டாடப்படும விழா. இது கொண்டாடப்படாததால் மணிபல்லவத் தீவிலிருந்த மணிமேகலைத் தெய்வம் சாபமிட்டது. சாபத்தால் புகார் நகரமும், நாகநாட்டு 400 யோசனை நிலப்பரப்பும் கடற்கோளுக்கு இரையானது என்ற காரணத்தையும் சொல்வார்கள். இந்த கடற் கோலினால் சப்த தீவுகள் தோன்றியிருக்கலாம். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் களனி இராச்சியத்தை ஆண்ட களனிதிஸ்ஸ ஆட்சியின் போது ஏற்பட்ட கடற்கோள் இதுவாக இருக்கலாம். பூம்புகார் நகரமும், அதனை அடுத்திருந்த தீவாகிய 400 யோசனை நாகநாடும் நிலநடுக்கத்தால் அழியும் என புத்தமுனிவர் சொன்னார். அவர் சொன்படி பூம்புகார் நகரை கடலகொண்டது என்பது இன்னொரு விளக்கம்.

காப்பியத் தலைவி மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள்; கோவலன் தந்தை கொலையுண்டதை அறிந்த மாதவி தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியானாள். தன்மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய் சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆட வருமாறு அழைக்கிறாள். மாதவியோ, மறுத்து விடுகிறாள். மணிமேகலையைக் கற்பரசி கண்ணகியின் மகள் என்றும், அவள் தீய தொழிலில் ஈடுபட மாட்டாள் என்றும் அறிவிக்கிறாள்.

கோவலன் கொலைப்பட்ட துன்ப நிகழ்ச்சியைப் பற்றி மாதவி கூறக் கேட்ட மணிமேகலை கண்ணீர் வடிக்கிறாள். அவள் கண்ணீர்த் துளி புத்த பெருமானுக்காகத் தொடுத்த பூமாலையில் பட்டுப் புனிதம் இழக்கச் செய்கிறது. அதனால் புதிய பூக்கள் பறித்து வந்து மாலை தொடுக்க மணிமேகலையும், அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் பூங்காவுக்குச் செல்கின்றனர்.

அப்போது, மதங்கொண்ட யானையை அடக்கிய சோழ மன்னனின் மகன் உதயகுமரன், மணிமேகலை மலர் வனம் புகுந்ததை அறிந்து அவளைத் தேடி உவவனம் வருகிறான். உதயகுமரன் தன்பால் மிகுந்த காதல் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த மணிமேகலை, செய்வதறியாது அங்குள்ள பளிக்கறை மண்டபத்தில் ஒளிந்து கொள்கிறாள். அவளைப் பற்றிச் சுதமதியிடம் உதயகுமரன் கேட்க, அவளோ “மணிமேகலை தவ ஒழுக்கம் உடையவள்; சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையவள்” என்கிறாள். பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன், உள்ளே செல்ல வழியறியாது தடுமாறுகிறான். மணிமேகலையைச் சித்திராபதியால் அடைவேன் எனச் சினத்துடன் கூறி நீங்குகிறான்.

பளிக்கறை விட்டு வெளிவந்த மணிமேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “அவன் என்னை இகழ்ந்து பேசினான். இருந்தும் என் நெஞ்சம் அவனை நோக்கிச் செல்கிறது. காதலின் இயற்கை இது தானா? அப்படியாயின் அது கெட்டு அழியட்டும்” என்று தோழியிடம் கூறுகிறாள். அப்போது, இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவர்களை அணுகி, “இது முனிவர் வனமாதலின் உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றனன்; நீவிர் இருவரும் சக்கரவாளக் கோட்டம் செல்க” என அறிவுறுத்துகிறது. சக்கரவாளக் கோட்டத்தில் சுதமதி சிறிது கண் துயில்கிறாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயக்கி மணிபல்லவம் எடுத்துச் செல்கிறது. பின் அத்தெய்வம் உதயகுமரனைக் கண்டு “தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை ஒழிக” என அறிவுறுத்துகிறது. தொடர்ந்து மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் சென்று, “மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கிறாள்; அங்குத் தன் பழம் பிறப்பை அறிந்து ஏழு நாட்களில் திரும்பி வருவாள்” என்கிறது. சக்கரவாளக் கோட்டத்திலுள்ள கந்திற்பாவையும், மணிமேகலை ஏழு நாட்களில் “தன் பிறப்பதனோடு நின்பிறப்பும் உணர்ந்து வருவாள்” என்கிறது. அப்போது பொழுது விடிகிறது. சுதமதி மாதவியிடம் வந்து நிகழ்ந்தவற்றைக் கூறி வருந்தி இருக்கிறாள்.

மணிபல்லவத்தில் தனித்து விடப்பட்ட மணிமேகலை உவவனத்தையோ சுதமதியையோ காணாது புலம்புகிறாள். தன் தந்தை கோவலனை நினைக்கிறாள். பலவாறு புலம்பும் மணிமேகலையின் முன் புத்த பெருமானின் மறுவடிவான தரும பீடிகை காட்சியளிக்கிறது. கண்ணில் நீர் வழிய, கைகள் தலைமேல் குவிய, பீடிகையை மும்முறை வலம் வந்து முறைப்படி தொழுகிறாள். தொழுத அளவில் தன் முந்திய பிறவி பற்றி அறிகிறாள். தான் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்து, அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்ததை அறிகிறாள். இராகுலன் ‘திட்டிவிடம்’ என்னும் பாம்பு தீண்டி இறந்துபடத் தான் தீப்புகுந்து இறந்ததுமாகிய பழம்பிறப்பினை உணர்கிறாள். பின், அங்குத் தரும பீடிகை தொழுது நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் மாதவி, சுதமதி ஆகியோர் தம் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறாள். முற்பிறப்பில் இராகுலன் ஆக இருந்தவன்தான் உதயகுமரன் என்பதையும் அறிகிறாள். மணிமேகலா தெய்வம், மணிமேகலைக்கு இனி எதிர்காலத்தில் நிகழ விருப்பதைக் கூறுகிறது. வேற்று உருவம் கொள்ளுதல், பசியைத் தாங்கிக் கொள்ளுதல், வான்வழிச் செல்லுதல் ஆகிய ஆற்றல்களைத் தரும் மூன்று மந்திரங்களை மணிமேகலைக்கு அருளிச் செல்கிறது.

பின் மணிமேகலை அங்குள்ள மணற்குன்றுகள், பூஞ்சோலை, பொய்கை முதலானவற்றைக் கண்டு களிக்கிறாள். அவள்முன் தீவ திலகை என்னும் தெய்வம் தோன்றி, “கோமுகிப் பொய்கையில் அமுதசுரபி தோன்றும் நாள் இது; ஆபுத்திரன் கையில் இருந்த அப்பாத்திரம் உன் கைக்குக் கிடைக்கும்” என்று கூறி அழைத்துச் செல்கிறது. இருவரும் கோமுகிப் பொய்கையை வலஞ்செய்து வணங்க, அமுதசுரபி மணிமேகலையிடம் வந்து சேர்கிறது.

அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும் என்று அதன் சிறப்பினைத் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைக்கிறாள்.

மணிபல்லவத்தில் ஆபுத்திரனின் அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வறியவரின் பசிப்பிணி தீர்க்க வான்வழியே புகார் வருகிறாள். அங்கு மாதவியையும் சுதமதியையும் கண்டு அவர்தம் பழம்பிறப்பும் அமுதசுரபியின் சிறப்பும் கூறுகிறாள். இங்குப் பழம்பிறப்பில் ‘இலக்குமி’யாகப் பிறந்த மணிமேகலைக்குத் தாரை, வீரை என்ற தமக்கை (அக்காள்) யராகப் பிறந்தவர்களே மாதவி, சுதமதி என்பது தெரிய வருகிறது. பின்பு மூவரும் அறவண அடிகளைக் கண்டு தொழுது நிகழ்ந்தவற்றை எடுத்துரைக்கின்றனர். அடிகள் அவர்களின் பழம்பிறப்பை உணர்த்தி, அவர்களைப் புத்த நெறிப்படுத்துகிறார். இங்கு, அவரால் ஆபுத்திரன் வரலாறு சொல்லப்படுகிறது.

ஆபுத்திரன் சிந்தாதேவி என்னும் தெய்வத்தின் அருளால் அமுதசுரபி பெற்றுப் பசிப்பிணி தீர்த்து வருகிறான்; இதனால் அவன் புகழ் பரவுகிறது. பொறாமை கொண்ட இந்திரன் நாட்டை மழையால் செழிக்கச் செய்கிறான். இதனால் அமுதசுரபிக்குத் தேவையில்லாமல் போகிறது. எனவே சாவக நாடு சென்று பசிப்பிணி போக்கச் செல்லும் ஆபுத்திரன் மணிபல்லவத்தில் தனித்து விடப்படுகிறான். அங்கு மக்களே இல்லாததால் வருந்திய ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அவன் செய்த அறப்பயனால் சாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் தோன்றி, பூமிச்சந்திரன் என்ற அரசனால் தத்தெடுக்கப்பட்டு அரசனாகி நல்லாட்சி செய்கிறான்.

இவ்வாறு ஆபுத்திரன் வரலாறு கூறிய அடிகள் மணிமேகலையைப் பசிப்பிணி தீர்க்கும் பேர் அறத்தை மேற்கொள்ளப் பணிக்கிறார். அவளும் துறவுக் கோலங்கொண்டு, காயசண்டிகை வழிப்படுத்த ஆதிரையிடம் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள்; காய சண்டிகையின் ‘யானைத் தீ’ என்னும் அடங்காப் பசிநோயும் நீங்க அவள் தன்னுடைய  நாடு புறப்பட்டுச் செல்கிறாள்.

மணிமேகலையின் துறவு வாழ்வை விரும்பாத சித்திராபதி உதயகுமரனைத் தூண்டி விடுகிறாள். அவன் மணிமேகலையை அடைய முயற்சி செய்ய, அவள் காய சண்டிகையாக உருவத்தை மாற்றிக் கொண்டு அறம் செய்கிறாள். காய சண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என உணர்ந்த உதயகுமரன் பாதி இரவில் அவளைக் காண வருகிறான். இதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொண்டதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். மணிமேகலை இதனை உணர்ந்து புலம்ப, அவளைக் கந்திற்பாவை தடுத்துத் தேற்றுகிறது. இளவரசன் கொலைக்குக் காரணமான மணிமேகலையை அரசன் கைது செய்கிறான். அவன் தேவி, அவளைப் பலவாறு துன்புறுத்த, மணிமேகலை தான்பெற்ற மந்திரத்தால் அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறாள். சிறையிலும் அறம் செய்கிறாள். இதனால் அஞ்சிய தேவி மணிமேகலையை வணங்க, அவள் காமம், உயிர்க்கொலை, பொய் முதலானவற்றின் குற்றங்களைத் தேவிக்கு எடுத்துரைக்கிறாள்.

மீண்டும் மணிமேகலையைக் கலை வாழ்வில் ஈடுபடுத்தச் சித்திராபதி அரசமாதேவியிடம் வேண்டுகிறாள். தேவி மறுத்து விடுகிறாள். அதே நேரத்தில் மணிமேகலையை மீட்க அறவண அடிகள், மாதவி, சுதமதி வருகின்றனர். தேவிக்கு அறவுரை கூறிய அறவணர் வேற்று நாடு செல்கிறார்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற மணிமேகலை, ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆட்சி புரியும் சாவக நாடு செல்கிறாள். அங்குத் தருமவாசகன் எனும் முனிவன் இருப்பிடம் உள்ளது. அங்கு வந்த ஆபுத்திரன் மணிமேகலையை யார் என அறிகிறான். அவனது பழம்பிறப்பை அறிய மணிபல்லவத்துக்கு மணிமேகலை அழைத்துச் செல்கிறாள்; அங்குத் தரும பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பு வரலாற்றை அறிகிறான். பின் தீவ திலகையும் மணிமேகலையும் ஆபுத்திரனை அவன் நாடு செல்லப் பணிக்கின்றனர்; மணிமேகலை வான்வழியாக வஞ்சி நகர் அடைகிறாள்.

வஞ்சி நகர் வந்த மணிமேகலை கண்ணகிக் கடவுளை வணங்குகிறாள். பத்தினி கடவுளாகிய கண்ணகி தன் பழம்பிறப்பு வரலாற்றை மணிமேகலைக்கு விரித்துரைக்கிறாள். பின்னர் வேற்றுருக் கொண்டு பிற சமயக் கருத்துக்களை அறிந்து வர வேண்டுகிறாள். மணிமேகலையும் ‘மாதவன்’ வடிவு கொண்டு பிரமாணவாதி முதல் பூதவாதி வரை, அனைத்துச் சமயவாதிகளின் கொள்கைகளைத் தெரிந்து கொள்கிறாள். பின் அங்குள்ள பௌத்தப் பள்ளியில் தவம் செய்யும் கோவலன் தந்தை மாசாத்துவானைக் காணுகிறாள். அவன், தன்வரலாறு கூறியதுடன், மாதவியும் சுதமதியும் கச்சி மாநகர் சென்றுள்ளதை அறிவிக்கிறான். அங்கு மழையின்றி மக்கள் பசியால் வாடுவதை எடுத்துக் கூறி, அங்குச் சென்று பசிப்பிணி நீக்குமாறு வேண்டுகிறான்.

மணிமேகலை தன் உண்மை வடிவுடன் கச்சி மாநகர் அடைந்து, அந்நாட்டு அரசன் இளங்கிள்ளிக்கு நல்லறம் கூறி, நாட்டு மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். அங்குத் தீவ திலகைக்கும், மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோவிலும் எழுப்பப்படுகின்றன. அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் அவளது அறச்சாலை அடைந்தனர். அவர்களை, மணிமேகலை இனிதே வரவேற்க, அடிகள் காவிரிபூம்பட்டினம் கடலால் அழிந்ததை எடுத்துரைக்கிறார். மணிமேகலை, தான் பல சமயக் கணக்கர் கொள்கைகளை அறிந்தும், அவற்றில் சிறப்பில்லை என்று உணர்ந்ததாகக் கூறுகிறாள். பௌத்த சமயத் தருக்க நெறிகளை அறவணர் அவளுக்குப் போதிக்கிறார். மணிமேகலை புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரத்தை மும்முறை தியானம் செய்து தன் பவத்திறம் நீங்க நோன்பு மேற்கொள்கிறாள்.

 ♣♣♣♣♣

 

       

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book