20

Kandy King

மரபுக் கதை 15

 

கண்ணுசாமி கண்டி மன்னனான கதை

 

நாயக்கர் பரம்பரையில் கடைசியாக கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன். இம்மன்னன் பிறப்பால் தமிழன், இந்து, ஆனால் சந்தாப்பமும் சூழ்நிலையும் அவனைப் பௌத்த சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இராச்சியத்துக்கு மன்னனாக்கியது. கண்ணசாமி என்பது இம்மன்னனின் உண்மைப் பெயர். 18 வயதில் ஹங்குரங்கெட்ட என்ற கண்டி இராச்சியத்தின் ஒரு பகுதியின் திறைச்சேரிக்கு அதிகாரியாக இருந்தவன். பிள்ளைகள் இல்லாத இராஜாதி இராஜசிங்கா 1798ஆம் ஆண்டு ஜுலை 16ம் திகதி இறந்தவுடன் பிரதம அதிகாரியாக இருந்த பிலிமத்தலாவ ஏற்கனவே போட்டிருந்த திட்டம் அமுலுக்கு வரத்தொடங்கியது. இவ்வதிகாரியின் முழு நோக்கமும் மன்னன் இறந்தவுடன் தானே மன்னனாவதாகும். ஆனால் பிரபுகளுக்கிடையே போட்டியும் போறாமையும் நிலவியபடியால் அவன் நினைத்த மாதிரி மன்னனாக முடியவில்லை. தனக்கு வேண்டியது தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கக் கூடிய ஒரு மன்னன். அதன் பின்னர் சிறிது சிறிதாக அதிகாரங்களைக் கைக்குள் கொண்டு வந்து அரியாசனத்தைக் கைப்பற்றுவதே அவன் நோக்கம். இதற்கு அவனுக்கு இலக்காக கிடைத்தது கண்ணுசாமி.

இராஜாதி இராஜசிங்கனுக்கு நான்கு இராணிமார்கள்.  அதில் இரு சோடிகள்; சகோதரிகள். முதலாம் சோடிக்கு முத்துசாமி, புத்தசாமி, கண்ணசாமி, சின்னசாமி, அப்புசாமி, அய்யாசாமி, இரங்கசாமி என்று ஏழு சகோதரர்கள். இரண்டாவது சோடிக்கு கந்தசாமி என்ற பெயருடன் ஒரு சகோதரன் இருந்தான். பிள்ளைகள் இல்லாத மன்னன் இறந்தவுடன் நாயக்கர் வம்சத்தின் வழக்கப்படி இவர்களில் ஒருவர் மன்னனாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தனது மரணத்துக்கு முன்னர் மன்னன், முத்துசாமியை தனக்குப் பின் தற்காலிக மன்னராக. இராணிமார் தங்களது சகோதரங்களின் மகன்மார் ஒருவரை அரியாசனத்துக்கு தேர்ந்தெடுக்கும் வரை நியமித்தான். ஆனால் மகா அதிகாரியான பிலிமத்தலாவ முத்துசாமியை தற்காலிகமாக பதவி ஏற்க விடவில்லை. இவ்வதிகாரியின் திட்டத்தின் படி கண்ணசாமியை அரியாசனத்துக்கு நியமித்து படிப்படியாக தான் பதிவியை கைப்பற்றுவதே.

இராமேஸ்வரத்தின் பிரதம குருக்களான வெங்கட பெருமாளின் மனைவி பெயர் சுப்பம்மா. அவர்களுக்கு பிறந்தவனே கண்ணசாமி. அவன் ரூபத்தில் வறுமையால் வாடிய அவர்களுக்கு நல்வாழ்வுகிட்டியது. இராஜாதி இராஜசிங்காவி இரண்டாவது இராணியான உபேந்திரம்மாவின் சகோதரியே சுப்பம்மா.

கண்ணசாமிக்கு ஐந்துவயதாக இருக்கும் போது தந்தை வெங்கட பெருமாள் சிவபதம் அடைந்தார். அவரின் மரணத்துக்குப் பின்னர் சுப்பாம்மாவும் மகன் கண்ணசாமியும் அவனது சகோதரன் கொண்டசாமியும் உபேந்திரம்மாவின் உதவிநாடி கண்டிக்கு புலம்பெயர்ந்தனர். கண்டிக்கு புலம் பெயரும் போது கண்ணசாமிக்கு வயது எட்டு. இன்னும் சில வருடங்களில் தான் கண்டி இராச்சியத்துக்கு மன்னனாவேன் என கனவிலும் அவன் நினைத்து பார்த்திருக்கவில்லை.

கண்ணசாமி மன்னான கதை

1790ம் ஆண்டு இராஜாதி இராஜசிங்கனால் மகா அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பிலிம்மத்தலாவ நாயக்கர் வம்சத்தை மனதுக்குள் முற்றாக வெறுத்தவன். கண்டி இராச்சியத்தை தொடர்ந்து நாயக்கர் வம்சம் ஆட்சி செய்யக் கூடாதென திட்டம் வகுத்தான். பல பிரபுக்கள் அவனோடு கூட்டு சேர்ந்தனர். தனது அதிகாரத்தைப் பாவித்து வேண்டியளவுக்குச் செல்வம் சேர்த்தான். பிலிமத்தலாவைமேல் பொறாமை கொண்ட சில பிரபுக்கள் நாயக்கர்களுக்கு ஆதரவு நல்கினர். கரையோரப் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களை தனக்கு சாதகமாக பாவித்து 1798ஆம் ஆண்டு இராஜாதி இராஜ சிங்காவை பதவியில் இருந்து இறக்கினான் பிலிமத்தலாவ. மன்னன் உயிரோடு இருக்கும் வரை தனது சதித் திட்டத்தை செயல்படுத்துவது கடினம் என்பது அதிகாரிக்கு தெரியும். அரசசபையில் மன்னன் இல்லாததினால் குழப்பங்கள் உருவாகத் தொடங்கியது. விரைவில் தனக்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய ஒரு நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஓருவரை மன்னராக்கி பினனர் அவரை தொலைத்துக் கட்டிவிட்டு தான் அரசு ஏறுவது எனத் தீர்மானித்தான். இதற்கு தேர்நதெடுக்கப்பட்டவன் சுப்பம்மாவின மகன் கண்ணசாமி என்ற இளவரசன். அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது. இதை செயல்படுத்த சங்கைக்குரிய மொராதோட்ட இராஜகுரு ஸ்ரீ தம்மாகந்த மகா நாயக்க தேரோவை சந்தித்து தன் திட்டத்தை விளக்கினான் பிலிமத்தலாவை.

“மன்னனின் உயிர் இன்றோ நாளையோ என்ற நிலையில் இருக்கிறது. சில நாட்கள் மட்டுமே அவர் வாழ்வார் என்பது என் கருத்து.  அவரின் இடத்திற்கு யாரை நியமிக்க யோசித்திருக்கிறீர்” எனறு பிலிமத்தலாவையை தேரோ கேட்டார்.

“என்னிடம் அதற்கு ஒரு நல்ல திட்டம் இருக்கிறது தேரோ. மன்னனின் இடத்திற்கு எமது சொல் கேட்டு ஆட்சி புரியும் ஒருவனை தேர்ந்தெடுத்துள்ளேன். பெயரளவில் அவன் மன்னன். ஆனால் அதிகாரங்கள் எம் கையில்” என்றான் பிலிமத்தலாவை.

“நல்லது. நீர் நினைத்தபடி தேர்ந்தெடுத்தவருக்கு படிப்பறிவு இல்லாவிட்டால் சில சமயம் எமக்கு எதிராக சில காலத்தில் செயல்படலாம். எதுற்கும் சிந்தித்து அவரை நியமனம் செய்யும்” என்றார் தேரோ

“அதற்கும் ஒரு வழியுண்டு. அவர் எமக்கு எதிராக மாறினால் நாம் பிரித்தானியரின் உதவி பெற்று அவரை பதவியில் இருந்து இறக்கலாம்.”

“நீர் சொல்வது ஒல்லாந்தர் காலத்தில் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் பிரித்தானியர்கள் சூழ்ச்சிக்காரர்கள். கடைசியில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றித் தம் கையுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். கவனம். யானைப் பாகன் யானையை சரியாகக் கவனிக்காவிடில் அது மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். அதோடு அதன் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். மற்றவர்களோடு கலந்தாலோசித்து எமது புத்தமதத்தையும், நாட்டையும், உமது அதிகாரங்களையும் காக்க கூடியவரான ஒருவரை தேர்ந்தெடும்.” என்றார் தேரோ.

முத்துசாமியின் கதை

பட்டத்துக்கு தகுதியுள்ளவனான முத்துசாமிக்கு அரியாசனம் கிடைக்காது செய்தவன் பிலிமத்தலாவை. முத்துசாமி எப்படியும் கண்ணசாமிக்கு எதிராக யுத்தம் செய்து கண்டி இராச்சியத்தை கைப்பற்றலாம் எனக் கருதி அவனைக் கொலை செய்ய பிலிமத்தலாவை திட்டம்போட்டான் இதையறிந்த முத்தசாமி பிரித்தானிய தேசாதிபதி நோர்த்திடம் போய் முறையிட்டான். அவர் முத்துசாமிக்கு அபயம் கொடுத்து சிறுதொகை பணமும் கொடுத்து ஒரு மெய்காப்பாளனுடன் யாழ்ப்பாணத்தில் போய் சிறிது காலம் வாழும்படி அனுப்பிவைத்தான். அவன் வசித்த வீடு யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இருந்த இராஜமாளிகையாகும். ஒரு நாள் முத்துசாமி விஸ்வநாத சாத்திரியாரை அழைத்து தனக்குரித்தான பட்டம் கிடைக்குமா என்று கேட்ட போது அதற்கு சாஸ்திரியார், “பட்டம் கிடைக்கும். அதுவும் சமீபத்தில் கிடைக்கும். பட்டத்துக்கு முன்னும் பின்னரும் அரிபகை என்றார். அதைக் கேட்ட முத்துசாமி தான் அரசனாவேன் என்ற மகிழ்ச்சியில் சாஸ்திரியாருக்கு இராஜஜோதிடர் என்ற பட்டம் வழங்கி வேண்டியளவு பணமும் கொடுத்து அனுப்பினான். முன்னும் பின்னும் அரிபகை என்பது, முன்னர் பாம்பு பகையும், பின்னர் தலை அரியும் பகை என்பது அர்த்தமாகும். சாத்திரியார் சொல்லி சில தினங்களில் நாகம் முத்துசாமியைத் தீண்டிற்று. விஷக்கடி வைத்தியர் இருபாலை செட்டியாரின் உதவியை நாடினர். அவரே அவனது விஷத்தை தீர்த்து வைத்தார். அதன் பின்னர் ஆங்கிலேயர் 1808ம் ஆண்டு முத்துசாமியை கண்டிக்கு அழைத்துச் சென்று சம்பிரதாயத்துடன் முடி சூட்டனர். அவனோடு உடன்படிக்கையும் செய்துகொண்டனர். அதன்பின்னர் பிலிமத்தலாவையினதும், கண்ணசாமியினது, வஞ்சக வலையில் விழுந்த நோர்த் தேசாதிபதி முத்துசாமியுடன் செய்து உடன்படிக்கையை இரத்துசெய்து, அவனை இராசபதவியில் இருந்து நீக்கி, கண்ணசாமியை பிலிமத்தலாவையின் உதவியுடன் அரசானாக்கினான். ஆனால் பிலிமத்தலாவையின் திட்டத்தால் விக்கிரமராஜசிங்கன் என்ற கண்ணசாமி, முத்துசாமியைச் சிரச்சேதம் செய்தான்.

விக்கிரம இராஜ சிங்கன் ஆட்சி

கண்ணசாமிக்கு நாத தேவாலயத்தில் சில கலவரங்களுக்கிடையே முடி சூட்டப்பட்டது. பத்து வருடங்களுக்கு பிரச்சனைகள் இன்றி ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்கன் என்ற பெயரில் ஆட்சிபுரிந்தான். இளைஞனான அவனுக்கு கேளிக்கைகளிலும் சுகபோகத்திலும் நாட்டமிருந்தது. மதுவுக்கும் சிறிது சிறிதாக அடிமையானான். இக்காலக்கட்டதில் திங்கொல்வெலயாய என்ற வயல வெளியை வெட்டி, தற்போதைய கண்டி நகரத்தை ஏற்படுத்தி கண்டி ஏரியையும் உருவாக்கினான். இந்த வயல் பகுதி ஒரு காலத்தில் நாத தேவாலயத்திற்கு தேவையான நெல்லை உற்பத்தி செய்து கொடுத்தது. இதே ஏரியில் தான் தனக்கு எதிராக சதிசெய்த ஏகலப்பொல குமாரகாமி என்ற தேசத் துரோகியை மூழ்கடித்து மன்னன் கொன்றான். தான் மக்களுக்கு தரிசனம் கொடுப்பதற்கு பட்டிருப்புவ என்ற எட்டு சுவர்களையுடைய கட்டுமானம் ஒன்றினை தற்போது உள்ள தலதா மாளிகையில் கட்டினான். இக்கட்டிடத்தை இன்றும் தலதா மாளிகாவில் காணலாம்.

இதன் கட்டிடக் கலைஞர் இந்தியாவைச் சேர்ந்த தேவேந்திர மூலாச்சாரி.

காலப்போக்கில் இறந்த மன்னருக்கு நடந்ததையும் தன்னை சூழ்ந்துள்ள சதிகாரர்களையும் பற்றி மன்னன் சிந்திக்கத் தொடங்கினான். தனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என அவன் மனம் சொல்லிற்று. தன் இராச்சியத்தை எந்த நேரமும் துரோகிகளை கைவசம் போட்டு கைப்பற்ற பிரித்தானியர் காத்திருக்கின்றனர் என்பதையும் அவன் உணர்ந்தான். பிலிமத்தலாவை எதிர்பார்த்தது போல் கண்மூடித்தனமாக முடிவுகள் எடுப்பவனாக மன்னன் இருக்கவில்லை. அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டுவந்து கொடுங்கோல் ஆட்சிபுரியத் தொடங்கினான். தன் அதிகாரிகளிடையே பிரபல்யமானவனாக திகழாவிடிலும் குடிமக்களின் ஆதரவு அவனுக்கு இருந்தது. சாதாரண குடிமக்களின் உரிமைகளுக்காக போராடியதால் பிரபுக்களின் எதிர்ப்பை சம்பாத்தித்துக் கொண்டான். குடிமக்களுக்கு நீதி கிடைக்க வழிசெய்தான். இவனது போக்கினால் பல எதிரிகள் பிரபுகளுக்கிடையே தோன்றினார்கள். பிரித்தானியர்களுக்கு அந்த சூழ்நிலை கண்டியைக் கைப்பற்ற சாதகமாக அமைந்தது.

கண்டி படையெடுப்பு

1803ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி பிரித்தானிய ஜெனரல் மெக்டொவல் என்பவர் கண்டியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி, உள்நாட்டவர்களின் கடும் எதிர்ப்பால் தோழ்வியில் முடிந்தது.  1815ம் ஆண்டு கண்டி அரசன் சீத்தாவக்கைப் பகுதியில் இருந்த பிரித்தானியப் படை மேல் தாக்குதலை நடத்தினான். இதுவே பிரித்தானியர் கண்டி இராச்சியத்தின் இரண்டாம் முறையும் படை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. 1814ம் ஆண்டில் கண்டி மன்னன், எகலப்பொல அதிகாகாரியை சப்பிரகமுவ பகுதிக்கு அனுப்பி நிலமையை அறிந்து ஆவன செய்யும்படி சொன்னான். அப்பகுதிக்கு எகலப்பொலவே திசாவை என்ற அதிகாரியாக இருந்தான். அவ்வதிகாரியின் ஆட்சியைப்பற்றி புகார்கள் மன்னன் காதுகளுக்கு எட்டியது. அவ்வதிகாரி பிரித்தானியர்களுடன் சேர்ந்து தனது ஆட்சிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுவதாக மன்னன் அறிந்தான்.  உடனே எகலப்பொலவை கண்டிக்கு வரும்படி கட்டளையிட்டான். மன்னனின் கோபத்தை அறிந்த எகலப்பொல போகவில்லை. தன்னுயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தே அவன் போகவில்லை. அவனது இடத்திற்கு மொலகொடவை மன்னன் நியமித்து புரட்சியை அடக்கினான். எகலப்பொல தப்பி ஓடி பிரித்தானியரிடம் அடைக்கலம் புகுந்தான். அவனை ஒன்றும் செய்யமுடியாத ஆத்திரத்தில் அவனது மனைவி, பிள்ளைகளையும் இனத்தவர்களையும் படுகொலை செய்து பழிவாங்கினான். இந்தப் படுகொலை மக்களுக்கு பயத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இதோடு மட்டும் நிறுத்தாமல் 1808ம் ஆண்டு எட்டு கோரலக்களில் ஏற்பட்ட புரட்சிகளை விசாரணை செய்ய ஆரம்பித்தான். மன்னனுக்கு பல பிரச்சனைகள் தோன்றத் தொடங்கியது. பிரபுக்களுக்கு அவனது போக்கு பிடிக்கவில்லை. தமது உயிருக்கும் எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற பயம் அவர்களை பீடித்துக்கொண்டது. மூன்று கோரல்லாக்கள் என்ற பகுதிகளில் பத்து பிரித்தானிய வணிகர்கள் களவாடப்பட்டு உளவாளிகள் என குற்றம் சாட்டி அடித்து துன்புருத்தப்பட்டனர். ஏழு வணிகர்கள் மரணத்தைத் தழுவினர். இந்த சம்பவமே 1815ம் ஆண்டு பிரித்தானியர் கண்டி மேல் படையெடுப்பு நடத்த முக்கிய காரணமாக இருந்தது. கொழும்பு, காலி, திருகோணமலை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து படைகள் கண்டியை நோக்கி முன்னேறின. பிரித்தானியரின் படையெடுப்புக்கு எகலப்பொல துணைபோனார். நாயக்கர் மன்னனுக்கு எதிராக கண்டி இராச்சியத்தின் பிரபுக்களினதும், மக்களினதும் எதிர்ப்பு பிரித்தானியருக்கு சாதகமாக அமைந்தது. மொலகொடை தனது பகுதியில் பிரித்தானியருக்கு எதிராக எதிர்த்து நின்று போரிட்டாலும் அவர்களுடைய எதிர்ப்பை சமாளிக்க அவரால் முடியவில்லை.

1815ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் பிரித்தானியரால் சிறை பிடிக்கப்பட்டான். கொழும்பில் இருந்த தேசாதிபதி பிறவுன்ரிக் என்பவருக்கு மன்னன கைதான செய்தி எட்டியபோது அவர் துயரத்தில் கண்ணீர்விட்டதாக சரித்திர எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம் 2357 வருடங்களாக இருந்து வந்த இலங்கைத் தீவின் சுதந்திரம் முற்றாகப் பறிபோனதேயாம்.

இராணி ரங்கம்மாள்.

நாயக்கர் வம்சத்தை சேர்ந்த மன்னனின் பட்டத்தரசி ரங்கம்மாள் அழகானவள். நாயக்கர் வம்சத்திலிருந்து வந்து கண்டியை ஆண்ட மன்னர்கள் புத்திசாலிகள். நாட்டோடு ஒத்துப்போவதற்காக சிங்கள மொழியைக் கற்று பௌத்தர்களானார்கள்.  இராஜாதி இராஜசிங்கன் சிங்களத்தில் நூல்கள் எழுதியதாகவும் வரலாறு சொல்கிறது. கண்டி இராச்சியம் பிரித்தானியர் கைகளில் விழுந்தவுடன் தெல்தெனியாவுக்கு அருகேயுள்ள நான்கு பக்கமும் மலைகளால் சூழ்ந்த பகுதியான மத்திய மகா நுவர என்ற பகுதியில் போமுறே உடப்பிட்டிய ஆராச்சிக்கே என்பவர் வீட்டில் மன்னரும் குடும்பமும் பதுங்கிக்கொண்டது.  நல்ல இடி மின்னலுடன் மழை பெய்யும் போது வீட்டை எகலப்பொல மகா அதிகாரமும் அவரது ஆட்களும் சூழ்ந்து கொண்டனர். தன் மனைவியையும் குழந்தைகளையும் மன்னன் கண்டி ஏரியில் மூழ்கடித்து கொலைசெய்ததற்காக அவர்களை பழிவாங்கவே அவன் அங்கு வந்திருந்தான். மன்னனையும் இராணி ரங்கம்மாளையும் அரை நிர்வாணமாக்கி அடித்துத் துன்புறுத்தினர். ராணியையும் மன்னனையும் முழு நிர்வாணமாக்கி கண்டிக்கு நடத்தி அழைத்து செல்ல திட்டமிட்டிருந்த போது John D Oyley என்ற பிரித்தானிய தளபதியின் தலையீட்டினால் மன்னன் காப்பற்றப்பட்டு. மன்னரையும் இராணிiயுயம் அவர்கள் குடும்பத்தினரையும் இரகசியமாக நீர்கொழும்பு வழியாக கொழும்புக்கு அழைத்து சென்று பின்னர் கப்பலில் வேலூருக்கு நாடு கடத்தினர்.

நாயக்கர் வம்சத்தின் முடிவு

தேசாதிபதி ரொபர்ட் பிறவுன்ரிக் (இன்றும் இவர் பெயரால் கொழும்பில் ஒரு வீதியுண்டு) தலைமையில் 1815ம் ஆண்டு மார்ச் 2ம் திகதி கண்டி இராச்சியத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டது. அதில் கையொப்பமிட்ட அதிகாரிகளில் இருவர் தமிழில் கையொப்பமிட்டனர். டொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா முதலியார் (சிறீலங்கா ஜனானாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் பூட்டனார்) மொழிபெயர்பாளராக கடமையாற்றினார். 1816ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி கொனவோலிஸ் என்ற கப்பலில் சென்னைக்கு குடும்பம் சகிதம் நாடுகடத்தப்பட்டார். மைசூரில் இருந்த திப்பு சுல்தானின் மகன் ஹைதர் அலியின் அரண்மணையில் சுமார் தனது 60 இனத்தவர்களுடன் 52 வயது வரை வாழ்ந்து, 1832ஆம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி வேலூரில் உயிர்நீத்தார். ஆறடி இரண்டங்குல உயரமும் கருமை நிறமுள்ள மன்னன், 17 வருடங்கள் கண்டியை ஆட்சி புரிந்தான். இவரோடு கண்டி நாயக்கர் சாம்ராஜ்யத்தின் கதை முடிவடைந்தது. இவரது ஆஸ்தி பார் நதியில் கரைக்கப்பட்டது. இவர் நினைவாக இன்று ஒரு கல்லறை வேலூரில் உண்டு.

                           ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book