17

Vattarapalai2

மரபுக் கதை 12


          வற்றாப்பளை அம்மன் அற்புதம்

 

கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில், இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான் கி.பி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய  கஜபாகு விழாவில் கலந்து கொண்டான். இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதெச அரசன் இளங்கோ அடிகளும், மகததேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரைஜெயநாதன் “ஆதிதிராவிடரும் அழிந்துபொன சங்கங்களும் “என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு, கண்ணகியை செங்குட்டுவனைப்போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகிமேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்பப் தன் விருப்பததை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான்.

செங்குட்டுவன், சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையைவைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பூனகரி ஊடாக தெற்கு இலங்கைக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.

இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கனாக்கடவை எனப்படும் இடம். அங்கனா என்பது அம்மனைக் குறிக்கும். சிங்களநாட்டில் பத்தினி தெய்யோ என கண்ணகி அம்மனை அழைக்க ஆரம்பித்தனர்.

நந்திக்கடல் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ளது. முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நந்திக்கடல் அருகே இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயில் எனக்கருதப்படுகிறது. பளையென்பது தங்குமிடத்தைக் குறிக்கும். கண்ணகியம்மாள் வந்தமர்ந்த பத்தாவது இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.

முல்லைத்தீவு என்ற ஊர் வன்னி மாவட்டத்தின் தலைநகராகும். கண்டி யாழ்ப்பாண A9 பிரதான வீதியில் உள்ள மாங்குளத்தில் இருந்து, கிழக்கே முல்லைத்தீவுக்கு முப்பது மைல் தூரம A34 என்ற பாதை ஒட்டுசுட்டான், முள்ளியவலை, தண்ணியூற்று ஆகிய கிராமங்களுடாக முல்லைத்தீவுக்கு செல்கிறது. முல்லைத்தீவீல், பிரதான வீதியான A34 யில் இருந்து மூன்று மைல் தூரத்தில் நந்திக் கடல் என்ற வாவியுண்டு. இவ்வாவியின் நீளம் 8.7 மைல்களும் அகலம் 3.1 மைல்களுமாகும். இந்த வாவிக் கரையில தமிழ் ஈழத்தின் இறுதிப் போர் நடந்தது. தனி ஈழத்துக்காக போராடிய தலைவர் துப்பாக்கிச் சூட்டினால் நந்திக் கடலோரத்தில் மரணம் அடைந்தார்.

முன்பு ஒரு காலத்தில், நந்திக் கடலோரத்தில், ஆட்டிடையர் குலச் சிறுவர்கள் ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி மரத்தின் கீழ இருப்பதைக் கண்டார்கள். தனக்குத் தங்குவதற்கு இடமில்லை என அவவம்மையார் சிறுவர்களிடம் முறையிட்ட போது அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தது மட்டுமன்றி அம்மையாருக்கு உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள். மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினர். அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் “பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாகப பாவித்து, திரிவைத்து விளக்கேற்றுங்கள் என்றார். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிப்பது வழக்கமாய் இருந்து வருகிறது

தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார். மூதாட்டியாரின் தலை முடியை வகுத்த சிறுவர்கள், தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர, “நான் ஒரு வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன்” எனக் கூறி மறைந்தார். சிறுவர்கள் நடந்ததை ஊர் சனங்களுக்கு எடுத்துச்சொன்னபோது அந்த அதிசயம் நடந்த குடிசையிருந்த இடத்தைச் சிறுவர்கள் அவர்களுக்கு காட்டினார்கள். அந்த குடில் இருநத இடத்தில் ஏதோ அதிசயம் இருப்பதாகக் கருதி அவ்விடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி, வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர். ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள்.

வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்பே, கொயில் பூசாரி, பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், ஒரு பித்தளைக் குடத்தை மேளதாளத்தோடு சிலாவத்தை என்ற கட்றகரைக்கு எடுத்துச் சென்று, கடல் நீரை குடத்தில் நிறப்புவார்கள். கடல் அலை பொங்கி வரும் போது குடத்தை சரித்து, கடல் நீரை ஒரே தடவையில் மொண்டி அள்ளுவது வழமையாக இருந்து வருகிறது. குடத்தை நீரோடு முள்ளியவளையில உள்ள காத்த விநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள். வைகாசி பொங்கல் தினத்தன்று விநாயகர் கோவிலில் இருந்து கண்ணகி அம்மன் கோவிலுக்கு தண்ணீர்க் குடத்தை எடுத்துச் சென்று, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு குடத்தில் உள்ள கடல் நீரில் விளக்கேற்றி வழிபடுவர்hகள். பொங்கி, நடுச்சாமம், பிராமணர்கள் மந்திரம் ஓத, கட்டாடி உடையார் என வழங்கப்படும் ஒருவர் பொங்கல் பானையை மடியில் வைத்து, அதைச் சுற்றி மாவிலை கட்டி அடுப்பில் வைப்பார். உடையாருக்கு உருவந்து, அடியார்களுக்கு கொடுக்கும் அரிசியை ஒவ்வொரு திசையிலும் வானத்தை நோக்கி உயர வீசுவார். அவர் வீசும் அரிசி அம்மனின் தோழிகளைப் போயடையும் என்பது நம்பிக்கை. மேலே எறிந்த அரிசி, மண்ணிலோ அல்லது பக்தர்கள் தலையிலோ விழுவதில்லை. இதுவும் அம்மனின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

திருக்குறளில் அனிச்ச மலர் மென்மையான மலராக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவவொரு தலத்துக்கும் தல விருட்சம் என்று ஒன்றுண்டு. வற்றாப்பளை அம்மனின் மூலஸ்தானத்துக்கருகே அனிச்ச மரம் ஒன்றுண்டு.  இந்த மரத்துக்கு ஒரு வரலாறு உண்டு. போர்த்துக்கேயர் தம்மதத்தைத் தவிர வேறு மதங்களை மதிக்காதவர்கள். பல இந்துக் கோவில்களையும், புத்த விகாராக்களையும் இடித்துத் தள்ளியவர்கள் என்கிறது வரலாறு. போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது.  ஒரு போர்த்துக்கேய அதிகாரி ஒவவொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது, அம்மனை பரிகாசம் செய்வாராம். ஒரு நாள் கண்ணகி அம்மன் கோவில அருகே வந்த போது “எங்கே உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் எங்கே இப்போது செய்து காட்டட்டும் “என்றார் அனிச்ச மரத்தின் கீழ், குதிரையில் அம்ர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றியவாறு.  உடனே தீடிரென அனிச்ச மரம் குளுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத்தொடங்கியது. மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள், அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல்விழுந்தன. அனிச்சம் காய்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது அதிகாரி காயமடைந்து குதிரையிலிருந்து, மூர்ச்சித்து கீழே விழுந்தான். அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்றுவரை அந்த அனிச்ச மரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. அதுவும் அம்மனின் அதிசயங்களில் ஒன்று.

பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் காற்சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.

                                     ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book