16

viharamahadevi

மரபுக் கதை 11

 

விகாரமகா தேவி

                                      

களனி கங்கையானது சிவனொலிபாதை மலையில் தோன்றி நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாவட்டங்களுக் கூடாக 145 கி.மீ தூரம் ஓடி, கொழும்புக்கருகே, மேற்கு கடலில் சங்கமம் ஆகிறது. களனி நகரம் கொழும்பிலிருந்து மேற்கு கடல் ஓரத்தில் வடக்கே 10 கி.மீ தூரத்தில், உள்ள 2000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு படைத்த நகரம். இந்நகரம் இராமாயணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இராவணின் சகோதரன் விபீஷணன் ஆண்ட பகுதி. இராமர் இராவணனை போரில் வென்று ஆயோத்தியா நகர் திரும்பமுன், தன் சகோதரன் லஷ்மணனைக் கொண்டு விபீஷணனை களனியில் இருந்து இலங்கையை ஆட்சி புரியச்செய்தான். களனி கங்கை கடலோடு கலக்கும் இடம் என்றபடியால் நகரத்துக்கு களனி என்ற பெயர் கிடைத்தது. புத்தர் இருதடவை இவ்விடத்துக்கு விஜயம் செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. முற்காலத்தில் களனி, நகரமாகவும் இராச்சியமாகவும் இருந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் களினி பகுதியை சுனாமி தாக்கியதால் தலைகரம் கொழும்புக்கு மாறியது என்கிறார்கள்; வரலாற்றாளர்கள். அக்காலத்தில்; மத்திய கிழக்கு, தென்கிழக்கு நாடுகளில் இருந்து வியாபாரம் நிமித்தம் வணிகர்கள் வந்து இறங்கிய இடம் களனி.

கி.மு முதலாம் நூற்றாண்டில் களனி இராச்சியத்தை களனிதிஸ்ஸ என்ற மன்னன் ஆட்சிசெய்தான். இவனது மகள் பெயர் தேவி. ஆனால் தற்போதைய ஆராச்சியின் படி சனவாரியாக அவள் பெயர் இருந்திருக்கலாம் என்பது ஒரு சாரர் கருத்து. சனவாரி, மாலைப் பொழுதினைக் குறிக்கும் பெயர்.

களனி திஸ்ஸ மன்னன் ஒரு கோடுங்கோலன். களனி பௌத்த விகாரையில் வயது வந்த பௌத்த துறவியும் அவரோடு 500 இளம் துறவிகளும் வழிபட்டுவந்தனர். அவர்கள் தமது போசனத்துக்காக அரண்மனைக் செல்வது வழக்கம்; வயது வந்த துறவியிடம்   மன்னனின் இளைய சகோதரன் உத்தியா கல்வி பயின்று வந்தான். உத்தியாவுக்கு பட்டத்து இராணி மேல் காதல். தன்மனைவிக்கும் சகோதரனுக்கும் இடையே இருந்த காதல் பற்றி அறிந்த மன்னன் உத்தியா மேல் நடிவடிக்கை எடுக்க முன்னர், உத்தியா தப்பி ஓடி உடுகம்பொல என்ற இடத்தில் மறைந்து வாழ்ந்தான். ஆனால் அவனுக்கும் இராணிக்குமிடையே தொடர்பு இருந்தது. இராணிக்கு ஒரு காதல் கடிதம் ஒன்றை எழுதி, துறைவி வேடம் தரித்த இளைஞன் ஒருவன் மூலம் உத்தியா கொடுத்து அனுப்பினான். அரண்மனைக்குப் போசனம் அருந்த துறவிகள் செல்லும் போது அவர்களோடு சேர்ந்து போய் கடிதத்தை இராணிக்கு கொடுக்கும் படி சொன்னான். போசனம் முடிந்து வயது வந்த துறவியோடு அரண்மனையை விட்டும் வெளியேறும் போது கடிதத்தை ராணிக்கு கொடுக்கும் சமயத்தில் அக்கடிதம் கீழே விழுந்த. சத்தம் கேட்ட மன்னன் கடிதத்தைக் கண்டான். வயது வந்த துறவிதான் இராணிக்கு கடிதத்தை எழுதியிருக்கிறார் என்று கடிதத்தில் உள்ள கையெழுத்தைக் கொண்டு முடிவு செய்து துறவியை உயிருடன் கொதிக்கும் எண்ணைக்குள் போட்டு கொலை செய்தான் மன்னன். பின்பு கடிதம் கொண்டு சென்றது துறைவி வேடம் போட்ட இளைஞன் என்றறிந்த மன்னர் அவனையும் கொலைசெய்து அவன் உடலை களனி ஆற்றுக்குள் வீசினான். தனது சகோதரனுடன் இராணியின் தொடர்பு இருந்ததால்; அவளையும் கயிற்றால் கட்டி ஆற்றுக்குள் எறிந்து அவளது உயிரையும் பலி கொண்டான். பௌத்த துறவியை கொதி எண்ணைக்குள் மூழ்கடித்து கொன்ற மன்னனின் செயல் மக்களிடையே கோபத்தைத் தோற்றுவித்தது.   அவனுடைய கொடுங்கொல் ஆட்சியைக் கண்டு காவல் தெய்வங்கள் சுனாமியை தோற்றுவித்தது இராட்சியத்தின் பெரும் பகுதியை அழித்தது.  சமுத்திரத்தின் கரையோரத்திலிருந்து சுமார் நான்கு மைல் தூர நிலத்தை கடல் விழுங்கியது. கரையோரங்களில் களனி முதறகொண்டு மன்னார் வரை வாழ்ந்த 970 மீனவர் குடும்பங்களும் 470 முத்து குளிப்போர் குடும்பங்களும் பேரலைகளுக்கு பலியானார்கள் என்கிறது “ராஜாவளி” என்ற நூல். இந்த சுனாமியால் நீர்கொழும்பு, மாதம்பை, கற்பிட்டி, மன்னார் போன்ற இலங்கையின் மேற்கு கரையோர ஊர்களும் பாதிப்படைந்தன. புத்தளத்துக்கும் கற்பிட்டிக்கும் இடையே உள்ள பல சிறு தீவுகள் தோன்ற இநத சுனாமி காரணமாக இருந்திருக்கலாம். களனிஸ்ஸவும் அவனது பட்டத்து யானையும் ஊரைச் சுற்றிவரும்போது ஒரு படுகுழிக்கள் விழுந்ததாகவும் அவனது உடலையுயம் யானையின் உடலையும் கண்டுடிக்க முடியவில்லை என்கிறது வரலாறு. அவன் இறந்த இடம் வத்தலைக்கு அருகே என்பது பலர் கருத்து.

சமுத்திர தேவியின் சீற்றத்தை எவ்வாறு அடக்க முடியும்; என அரசவையில் உள்ள சாத்திரிமார்களைக் கூட்டி ஆலோசனை கேட்டார் களனிதிஸ்ஸ மன்னர்; மன்னனின் மூத்த மகளும் நாட்டின் இளவரசியான தேவியை கடலுக்கு பழி கொடுத்தால் சீற்றம் அடங்கும் என்றார்கள் அரச சாத்திரிமார். கடலின் சீற்றத்தை நாட்டு மக்களின் கோபத்தையும், அடக்க மன்னருக்கு வேறு வழி தெரியவில்லை. தன் மகள் தேவியை பகடைக் காயாக்கினான் மன்னன். அவளும் தைரியமாக மன்னனின் திட்டத்துக்கு, களனி இராட்சியத்தின் நலனுக்குகாக தேவி உடன்பட்டாள். அவளுக்கு களனி இராச்சியம் தான் முக்கியம். ஒரு அலங்கரித்த வள்ளத்தில், பல நாட்கள் உயிர் வாழத்தேவையான உணவுவகைகள், தண்ணீh ஆகியவற்றை வைத்து தேவியை நகைகளோடு அலங்கரித்து வள்ளத்தில் சமுத்திரத்தில் விட்டான் மன்னன். விடும் போது அவள் யார் என்ற அறிமுகக் கடிதம் ஒன்றையும் வைத்தான். தந்தையின் செயலை எதிர்த்து வீரப் பெண்ணான தேவியும் மறுப்பு தெறிவிக்கவில்லை. சமுத்திரதேவியின் சீற்றம் மன்னனின் அச்செயலால் அடங்கியது என்கிறது வரலாறு.

தெற்கே நோக்கித் தேவியைச் சுமந்து கொண்டு சென்ற வள்ளம் இலங்கையின் தென்பகுதியான கிரிந்தவுக்கு அருகே உள்ள டோவர என்று கடவோரத்தைப் போய் சேர்ந்தது. கிரிந்த என்ற இடத்தில் ஒரு குன்றின் மேல் உள்ள ஒரு பௌத்த விகார கவன்திஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டது. கிரிந்த என்ற இடம் ருகுணுவில் உள்ள கதிர்காமத்துக்கு அருகே உள்ள கடலோரக்கிராமம்.  தேவியோடு மிதநது வந்த வள்ளத்தைக் கண்ட கடல் பறவைகள் ஆரவாரப்பட்டன. அதைக் கண்ட மீனவர்கள், வள்ளத்தில் ஒரு பெண் இருப்பதைக் கண்டு கரைசேர்த்தார்கள். கவன்திஸ்ஸ என்ற ருகுணு இராட்சியத்தின் மன்னனிடம் போய் செய்தியைச் சொன்னார்கள். அக்காலத்தில் ருகுண இராட்சியம் செழித்து இருந்த இராட்சியம். அதை ஆண்ட மன்னன் கவனதிஸ்ஸ கோதபாய மன்னனின் மகனாவான். திசமகரகம. ருகுணு இராட்சியத்தின் தலைநகராக இருந்து.

வள்ளத்தில் கரை சேர்ந்த தேவியை ஆரவாரத்தோடு ஊர்வலமாய் மன்னனிடம் அழைத்துச் சென்றனர் மீனவர்கள். தேவியோடு இருந்த கடிதத்தை வாசித்தறிந்த கவன்திஸ்ஸ, வள்ளத்தில் கரை சேர்ந்தவள் களினிதிஸ்ஸ மன்னனின் மகள் என்பதையும் அவள் வள்ளத்தில் வந்த காரணத்தையும் வாசித்தறிந்தான். தேவியின் தியாக உள்ளத்தை நினைத்துப் பெருமைப்பட்டான். கிரிந்த விகாரைக்கு அருகே தேவியின் வள்ளம் கரை சேர்ந்ததால் இளவரசிக்கு விகாரமகாதேவி எனப் பெயரிட்டான். களினிதிஸ்ஸ மன்னிடம். தேவியை மணக்க அனுமதி கேட்டு தூது அனுப்பினான் கவன்திஸ்ஸ. அக்காலத்தில் அனுராதபுரத்தை ஆண்ட நீதி தவறாத எல்லான் என்ற தமிழ் மன்னனுக்கு களனி இராட்சியமும், ருகுணு இராட்சியமும் கப்பம் கட்டி வந்தன. களனிதிஸ்ஸ மன்னனின் அனுமதி பெற்று, கவன்திஸ்ஸ விகாரமகாதேவியை கவன்திஸ்ஸ, மணந்தான். அவளுக்குப் பிறந்த இரு ஆண்குழந்தைகளில் மூத்தவன் கைமுனு, இளையவன் சதாதிஸ்ஸ. இருவருக்கும் இலங்கையை தென் இந்திய அரசர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. கைமுனு அனுராதபுரத்தை அப்போது ஆண்ட தமிழ் அரசன் எல்லாலனை போரில் வென்று, சிங்கள இராச்சியங்களை ஒன்றிணைத்தான். அவன் செயல்களினால் அவனுக்குத் துட்டகைமுனு என்ற பெயர் கிடைத்தது. இவன் ஒரு முருக பக்தன் எனவும் போருக்குப் போக முன் கதிர்காமக் கந்தனை வணங்கிச் சென்றதாக வரலாற்றுக்காரர்கள் கூறுகிறார்கள். சிலர் கதிர்காமக் கோயிலைக் கட்டியது துட்டகைமுனு என்கிறார்கள். இக்காணத்தால் இன்றும் பௌத்த சிங்களவர்களும், இந்துமத தமிழர்களும் கதிர்காமக் கந்தனை வணங்கி வருகிறார்கள்.  திசமாரகமவில் இருந்து கிழக்கே பதினொரு மைல் தூரத்தில் உள்ள கிராமம் கதிர்காமம். மாணிக்க கங்கை இக்கிராமத்தை தழுவிச் செல்கிறது. முருகன், வேடவப் பெண் வள்ளியை கதிகாமத்தின் சுற்றாடலில் சந்தித்து திருமணம் புரிந்ததாக இதிகாசக் கதையுண்டு.

கைமுனுவும் அவனது பட்டத்து யானையான “கந்துலுவும்” ஒரே நாளில் பிறந்தவர்கள் என்கிறது வரலாறு. துட்டகைமுனுவின் வீரத்தைப்பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி அரசியல் இலாபம் பெற்றார்கள் சிங்கள அரசியல் வாதிகள். கைமுனு துயிலும் போது குரண்டியவாறு படுத்திருப்பதைக் கண்ட தாய் விகாரமகாதேவி “ஏன் மகனே இப்படி கால்களை ஒடுக்கியவாறு படுக்கிறாய்”? என்று கேட்டதுக்கு, “தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும் கடல். வடக்கில் தமிழ் அரசனின் ஆட்சி. நான் எப்படி சுதந்திரமாக கால்களை நீட்டித் துயில முடியும்” என்றானாம் கைமுனு. அவன் விகாரமகாதேவியின் பெயரில் கொழும்பில் பெரிய பூங்காவொன்றுண்டு. கிரிந்தவில், விகாரமகாதேவிக்கு சிலை வைத்துள்ளார்கள்.

                         ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

20 மரபுக் கதைகள் Copyright © 2016 by பொன் குலேந்திரன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book